மின்னிலக்கமய அவசியத்தை கொவிட்-19 உணர்த்தியுள்ளது: அமைச்சர் இந்திராணி

2 mins read
86451e7f-ce54-4f92-abc4-52cdcb5ec36e
-

மின்னிலக்க அடையாள உலகில் பன்முகத்தன்மையை முன்னிறுத்தக்கூடிய 'உமன் இன் ஐடென்டிட்டி (WiD)' என்னும் லாப நோக்கமற்ற அமைப்பு அதன் சிங்கப்பூர் சாசனத்தை மெய்நிகர் நிகழ்வு மூலம் தொடங்கி உள்ளது. மின்னிலக்க அடையாளம் என்பது பொது மற்றும் தனியார் துறை சேவைகளைப் பெற தனிநபர் தகவல்கள் பயன்படுத்தப்படுவதை மையமாகக் கொண்ட மின்னிலக்கத் துறையின் துணை அம்சம். தொடக்க நிகழ்வில் நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

மேலும், மின்னிலக்க அடையாளத்தின் முக்கியத்துவம் குறித்தும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் (Stem) பணிபுரிய விரும்பும் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் நடத்தப்பட்ட குழு விவாதத்திலும் குமாரி இந்திராணி பங்கேற்றார். இந்தத் துறைக்குப் பெண்கள் இளம் வயதிலேயே வருவது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், அதற்காக அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

கொவிட்-19 கொள்ளைநோய் சிங்கப்பூர் மின்னிலக்கமயமாதலின் வேகத்தை அதிகப்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டார் பிரதமர் அலுவலக அமைச்சருமான குமாரி இந்திராணி. வீட்டிலிருந்து வேலை செய்தல், இணையத்தில் பொருட்களை வாங்குதல், இணையம் மூலமான உணவு விநியோகம் போன்றவற்றின் மூலம் புதிய வழக்கநிலை உருவாகி உள்ளதை அப்போது அவர் எடுத்துரைத்தார்.

"இவை எல்லாம் மின்னிலக்க அடையாளம் பெறுவதின் அவசியத்தை நோக்கிய நகர்வுகள். பரவலாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்தும் வகையிலான மின்னிலக்க அடையாளத்தைப் பெறுவதன் மூலமே வெற்றிகரமான மின்னிலக்கமயமாதலைச் சாதிக்க முடியும்.

"தேசிய மின்னிலக்க அடையாளம் வர்த்தகத்தில் புத்தாக்கத்தைப் புகுத்த உதவுவதோடு குடிமக்களுக்கும் வர்த்தகங்களுக்கும் வசதியான ஒன்றாக இருக்கும்," என்றார் அமைச்சர் இந்திராணி ராஜா.

மேலும், இப்போதைய கொள்ளைநோய் காலத்தில் மின்னிலக்க அடையாளத்தைப் பெற்றிருப்பது பயன்தரும் என்ற அவர், சேஃப்என்ட்ரி, டிரேஸ்டுகெதர் போன்ற கைபேசிச் செயலிகள் கொவிட்-19 கிருமித்தொற்றின் தொடர்புத் தடங்களை அறிய உதவுவது போன்றவை அதனோடு தொடர்புடையவை என்றார்.

அத்துடன் மின்னிலக்க வளர்ச்சியில் நாம் ஒவ்வொருவரும் பங்கு வகிப்பதை உறுதி செய்வதன் அவசியத்தையும் கொவிட்-19 நெருக்கடி ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார். உலக அளவிலான முடக்கநிலையும் சிங்கப்பூரில் கிருமிப் பரவலை முறியடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் இதனை உணர்த்தி உள்ளன.

"மின்னிலக்க சாதனங்களைப் பயன்படுத்துவோரைக் காட்டிலும் மூத்தோர், குறைவாகப் பயின்றோர் மற்றும் குறைந்த வருமானக் குடும்பத்தினர் கடும் சிரமத்திற்கு ஆளாவதை நாம் கண்டு வருகிறோம்," என்று குறிப்பிட்டார் குமாரி இந்திராணி. மின்னிலக்க அடையாளத்துடன் பெண்கள் முன்னணி வகிப்பதை உறுதி செய்வதில் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டு உள்ள சாசனம் பெரிதளவில் பங்களிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பவர்களின் தொடர்பை அறிவது போன்ற தேவை ஏற்படும்போது மட்டும் தனிப்பட்டவர்களின் தகவல்களை அரசாங்கம் சேகரிக்கும் என்றார் அவர்.