தஞ்சோங் பகார் முனையத்தில் கடலில் கட்டப்பட்டுள்ள மூன்று கட்டடங்களில் இதற்கு முன்பு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கவைக்கப்பட்டனர்.
வரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து அந்த மூன்று கட்டடங்களிலும் இனி கடலோடிகள் தங்கவைக்கப்படுவர். குறிப்பாக, சிங்கப்பூரிலிருந்து வேறொரு நாட்டிற்கு கப்பல் மூலம் பயணம் செய்யவிருக்கும் கடலோடிகள் அங்கு தங்கவைக்கப்படுவர்.
கடலோடிகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் புதிய மையத்தில் மருத்துவ நிலையம் ஒன்று இருப்பதாக சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது. கடலோடிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி அவர்களை அங்கு தங்கவைக்க அங்கு போதுமான இடம் உண்டு என்று ஆணையம் கூறியது.
இதனால் கப்பலில் இருப்பவர்களும் சமூகத்தினரும் பாதுகாப்புடன் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டது. கடலோடிகள் கப்பலில் ஏறி தங்கள் பயணங்களைத் தொடங்குவதற்கு முன்பு அந்தக் கட்டடங்களில் 48 மணி நேரம் வரை அவர்களைத் தங்க வைக்க மையம் கடப்பாடு கொண்டுள்ளது.
ஒருவேளை அடுத்த பயணத்துக்கு கடலோடிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்கள் மையத்தில் தங்குவர்.
"கப்பல் துறை உலகளாவிய வர்த்தகம் என்பதால் இத்தகைய திட்டங்களில் கூடுதல் துறைமுகங்களும் பங்குதாரர்களும் இணைய வேண்டும். அப்படி செய்தால் கடலோடிகள் தங்கள் பணியைச் செய்யலாம். இதன் வழி கப்பல் மூலம் விநியோகச் சேவைகள் தொடரும்," என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.

