தோ பாயோ வீடமைப்புக் கட்டடத்தில் தீ: 300 பேர் வெளியேற்றம், மருத்துவமனையில் மூவர்

1 mins read
4a9661d3-2969-4266-b0c6-cc590c5828dc
-

இன்று அதிகாலை தோ பாயோவின் 'தி பீக்' வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தால் 300 பேர் வெளியேற்றப்பட்டனர்.

அதிகாலை சுமார் 2.55 மணிக்கு புளோக் 138சி லோரோங் 1ஏ தோ பாயோ முகவரியில் தீச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்ததாக படையின் ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று மதியம் குறிப்பிடப்பட்டிருந்தது.

கட்டடத்தின் 20ம் தளத்தில் ஏற்பட்ட தீ, அதற்கும் மேற்தளத்திலுள்ள வீட்டையும் பாதித்துள்ளது.

20ம் தளத்திலுள்ள வீட்டிலிருந்த மூவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குத் தீக் காயங்களுக்காகவும் கரும்புகையை நுகர்ந்ததாலும் கொண்டுசெல்லப்பட்டனர். வீடுகளிலிருந்து வெளியேறிய குடியிருப்பாளர்கள் மீண்டும் வீடு திரும்பினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பாளர்கள் தீப்பற்றிய வீட்டிற்குச் சென்று உடனே தீயை அணைத்தனர்.

அந்த வீட்டின் குளியலறையில் இருந்த இருவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். மற்றொரு குடியிருப்பாளர் படையினர் வருவதற்கு முன்னரே வெளியேறிவிட்டார்.

தீயணைப்பு வீரர்கள் 21ம் தளத்திலுள்ள வீட்டினுள் நுழைந்து தீயை அணைத்தனர். அந்த வீட்டிலிருந்த குடியிருப்பாளர்கள் தீயணைப்பாளர்கள் வருவதற்கு முன்னரே வீட்டிலிருந்து வெளியேறிவிட்டனர்.