குடியிருப்புப் பகுதிகளில் சிகரெட் வாடை தொடர்பாக புகார்கள் அதிகரிப்பு

குடியிருப்புப் பகுதிகளில் சிகரெட் வாடை தொடர்பாக புகார்கள் அதிகரிப்பு

2 mins read
88725f23-bdc4-4b5b-8ebf-a65982dd8e55
கோப்புப்படம்: எஸ்டி -

அண்மைய மாதங்களாக குடியிருப்புப் பேட்டைகளில் புகைபிடிப்பது தொடர்பான புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தைக் கையாள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கடந்த மே, ஜூன் மாதங்களில் மட்டும் ஒவ்வொரு மாதமும் இது தொடர்பாக 2,500க்கும் அதிகமான புகார்கள் அளிக்கப்பட்டதாக நகராண்மை சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த அலுவலகத்தை மேற்பார்வையிடும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், கொவிட்-19 சூழலில் பலரும் வீட்டிலிருந்து வேலை செய்து வருவதால் புகைபிடிப்பது தொடர்பான புகார்கள் அதிகரித்திருப்பதாக நேற்று விளக்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர்நோக்கும் விவகாரமாக இது உருவெடுத்துள்ளதாக சொன்ன அவர், இதனை நகராண்மை சேவைகள் அலுவலகம் அணுக்கமாக ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து வெவ்வேறு குடியிருப்புப் பேட்டைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்து வரும் முயற்சிகளை அவர் கவனித்து வருகிறார்.

எடுத்துக்காட்டாக, நீ சூன் சவுத் பகுதியில் 2017ஆம் ஆண்டு முதல் புகைபிடிப்பதற்காக 50 இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா அவற்றை முதன்முறையாக அமைத்தார்.

நீ சூன் சவுத் பகுதியின் தூய்மை, பசுமைக் குழுத் தலைவரான திரு இங் ஹாக் ஹாய், இந்த இடங்கள் ஒவ்வொன்றுக்கும் சுமார் $8,000 செலவானதாகக் கூறினார். எனினும், தனிநபர்கள் மற்றும் வர்த்தகங்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகளைக் கொண்டு அவை அமைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திருமதி கேரி டான், வீட்டிற்குள் சிகரெட் வாடை வருவது குறித்து பல இளம் குடும்பங்கள் தம்மிடம் தெரிவித்ததாகச் சொன்னார்.

இதுகுறித்து புகைபிடிப்பவர்களுக்கு நினைவூட்ட மின்தூக்கிகள் போன்ற இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இந்த நடவடிக்கைகள் பலன் தருகின்றனவா என்று ஆராய்ந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டார்.

தமது சொந்த புக்கிட் தீமா தொகுதியில், பழங்கள் போன்றவற்றோடு புகைபிடிப்பதால் அண்டைவீட்டாருக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றி உணருமாறு குறிப்பிடும் கடிதத்தையும் தாம் புகைபிடிப்பவர்களுக்கு வழங்கி வருவதாக திருமதி சிம் ஆன் தெரிவித்தார்.

அதுபோக, தமது தொகுதியில் புகைபிடிப்பதற்கான தனி இடங்களை அமைப்பது குறித்து தமது குழுவினர் பரிசீலித்து வருகின்றனர் என்றும் அவர் சொன்னார்.