எதிர்த்தரப்பு தலைவருக்கான கடமைகள், சலுகைகள்

எதிர்த்தரப்பு தலைவருக்கான கடமைகள், சலுகைகள்

2 mins read
b412d918-14f4-4928-adc3-7be43f52d8d1
நாட்டின் 14வது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரான திரு பிரித்தம் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் பேசியபோது எடுக்கப்பட்டது. படம்: GOV.SG -

சிங்கப்பூரின் புதிய நாடாளுமன்றத்தில் மொத்தம் 12 எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 10 பேர் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இதர இருவர் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த தொகுதி இல்லாத உறுப்பினர்கள்.

பாட்டாளிக் கட்சியின் தலைைமச் செயலாளரான பிரித்தம் சிங் முறைப்படி எதிர்த்தரப்புத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குள்ள கடமைகள், சலுகைகளை எடுத்துக் கூறும் அமைச்சர் நிலை அறிக்கையை நாடாளுமன்றத் தலைவியான குமாரி இந்திராணி ராஜா நேற்று மன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதன்படி, திரு பிரித்தம் சிங், மன்றத்தில் பிரதமருக்கு எதிரே அமர்வார். இந்தப் பணியை அங்கீகரித்து இருக்கும் இதர நாடுகளில் இதே ஏற்பாடு நடப்பில் இருப்பதாக குமாரி இந்திராணி குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற நாயகரின் உசிதம், மன்றத்தில் பேச இப்போதுள்ள மரபுகள் ஆகியவற்றுக்கு இணங்க, கொள்கைகள், மசோதாக்கள் தீர்மானங்கள் பற்றி அமைச்சர்களிடம் முதன்மைக் கேள்விகளை கேட்கும் உரிமை, எதிர்த்தரப்புத் தலைவர் என்ற முறையில் அவருக்கு உண்டு.

திரு சிங், 40 நிமிடங்கள் பேச அனுமதிக்கும் மசோதாவை மன்றம் நிறைவேற்றி இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் திரு சிங்கிற்கு அலுவலகம், ஊழியர்கள், ஆண்டுக்கு $385,000 செலவுத் தொகை எல்லாம் கிடைக்கும்.

கொள்கைகள், மசோதாக்கள் தீர்மானங்கள் பற்றிய மன்ற விவாதத்தில் மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதில் திரு சிங் எதிர்த்தரப்புக்குத் தலைமை ஏற்பார்.

மன்றத்தில் அரசாங்கத்தின் நிலை, செயல் ஆகியவற்றை ஆராய்வதிலும் அவர் தலைமைப் பொறுப்பை ஏற்பார்.

மன்ற தேர்வுக் குழுவில் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் நியமிக்கப்படும்போது அதன் தொடர்பில் திரு சிங்கிடம் கலந்து ஆலோசிக்கப்படும். அதிகாரபூர்வ அரசு விருந்தில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு அனுப்பப்படும் வாய்ப்பும் உண்டு.

தேசிய பாதுகாப்பு, வெளியுறவு போன்ற விவகாரங்களைப் பொறுத்தவரை, ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு இரண்டுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசாங்கம் அப்போதைக்கு அப்போது ரகசியத் தகவல்களைத் தெரிவிக்கும்.

மன்றத்தில் இப்போது முன்பைவிட அதிக எதிர்த்தர்ப்பு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதால் விவாதத்திற்கு மாற்று யோசனைகளை, கருத்துகளை முன்வைத்து முன்பைவிட பெரிய பணியை அந்தத் தரப்பினர் ஆற்றுவார்கள் என்று தாங்கள் நம்புவதாக குமாரி இந்திராணி குறிப்பிட்டார்.

மன்றத் தலைவி குமாரி இந்திராணி, எதிர்த்தரப்புத் தலைவர் திரு பிரித்தம் சிங் இருவரோடும் சேர்ந்து செயல்பட்டு நாடாளுமன்றத்தை பலன் தரும் வகையில், ஒழுங்கு முறை தவறாமல் நடத்த தாம் நாட்டமுடன் இருப்பதாக மன்ற நாயகர் டான் சுவான் ஜின் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்