வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்க முடியுமா என்பதை அறிய சிங்கப்பூரின் வெளிநாட்டு ஊழியர் கொள்கையை மறுஆய்வு செய்ய இதுவே சரியான நேரம் என்று புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி உறுப்பினர் லியாங் எங் ஹுவா தெரிவித்தார்.
"சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கும் இங்குள்ள பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றவும் வெளிநாட்டு ஊழியர்கள் காலம் காலமாக உதவி இருக்கிறார்கள். இருப்பினும் இரு பெரும் சம்பவங்கள் கொள்கையை மறுஆய்வு செய்வதற்கான அவசியத்தை ஏற்படுத்தி உள்ளன.
"முதலாவதாக, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் பரவிய கொவிட்-19 கிருமித்தொற்று. ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்குக் கிருமி தொற்றியது எதிபாராத செலவுகளுக்கு வழிவகுத்துவிட்டது.
"இரண்டாவது நிகழ்வு, 2013ஆம் ஆண்டு லிட்டில் இந்தியாவில் மூண்ட கலவரம். இவ்விரு சம்பவங்களிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் வெளிநாட்டு ஊழியர் சார்ந்திருப்பைக் குறைக்க இன்னும் அதிகம் செய்ய வேண்டி உள்ளது.
"கட்டுமானம் போன்ற துறைகளுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தேவை என்றபோதிலும் உற்பத்தித்திறனை மேம்படுத்த இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது" என்று திரு லியோங் கூறினார்.


