சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டும் சிறப்புக் கல்வி ஆசிரியர்கள், கற்பித்தல், தலைமைத்துவம் ஆகிய இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கு இப்போது அதிகமான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தத் துறையில் புதிதாக பணியில் சேர்வோர், ஆசிரியர் பணிக்கான ஒப்பந்தம் மூலம் அந்த ஒப்பந்தக் காலத்தில் தேசிய கல்விக் கழகத்தில் பட்டயக் கல்வியில் சேர்ந்து படிக்க புதிய திட்டம் வழி விடுகிறது.
சிறப்புக் கல்வித் துறையை மேம்படுத்தும் திட்டங்களில் ஒரு பகுதியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வாழ்க்கைத் தொழில் மற்றும் பயிற்சி வழிகாட்டிகள் ஆகியவற்றுடன் இந்தத் திட்டம் குறித்து கல்வி துணை அமைச்சர் சுன் சூலிங் நேற்று தெரிவித்தார்.
சிறப்புக் கல்வி கற்பித்தல் துறையின் வாழ்க்கைத் தொழிலின் தரத்தை மேம்படுத்தி அந்தத் துறைக்கு அதிகமானோரை ஈர்ப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
2018 நவம்பர் மாதம் சிறப்புக் கல்வித் துறையில் உள்ள மனித வள நடைமுறை குறித்து கல்வி அமைச்சால் மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அரசாங்க நிதி உதவியுடன் செயல்படும் சிறப்புக் கல்வி வழங்கும் 19 பள்ளிகளிலும் 12 சமூக சேவை முகவைகளால் நடத்தப்படும் பள்ளிகளிலும் வாழ்க்கைத்தொழில் கட்டமைப்புகள் ஒன்றுக்கொன்று வேறுபாடு கொண்டவையாக இருந்தது தெரியவந்தது.
இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் 70 விழுக்காட்டினருக்கும் மேலான சிறப்புக் கல்வி ஆசிரியர்களுடனும் சமூக சேவை முகவைகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டதாக துணை அமைச்சர் சுன் கூறினார்.
இந்தப் பள்ளிகளில் தொடர்புத்திறன் குறைபாடு மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுகளைக் கொண்ட 6,600 மாணவர்கள் பயில்கிறார்கள்.
இந்த மாணவர்களின் தேவைக்கேற்ப கற்பித்தல் அணுகுமுறையை வகுத்து இந்தப் பள்ளிகள் பாடம் கற்பித்து வருகின்றன.
நேற்று இணையம் வழி நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை அமைச்சர் சுன், சிறப்புக் கல்வித் துறையின் மனிதவளம் குறித்து கடைசியாக கடந்த 2007ஆம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறினார். அதற்குப் பின்னர் சிறப்புத் தேவையுடைய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எதிர்காலத்தில் அதிகமான மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க இப்போதைய பள்ளிகள் போதுமானவை அல்ல.
எனவே, அடுத்த ஏழாண்டுகளுக்குள் மேலும் ஏழு சிறப்புக்கல்வி வழங்கும் பள்ளிகளைத் திறக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது என திருமதி சுன் கூறினார்.
அதேவேளையில் சிறப்புக் கல்வி கற்பித்தலை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டுள்ள ஆசிரியர்கள் இந்தத் துறையில் ஆசிரியர்களாக தாங்கள் செய்ய வேண்டிய பணிகள், பொறுப்புகள் ஆகியவை குறித்து ஒரு தெளிவான வரையறை தேவை என்று அவர்கள் விரும்புவது கல்வி அமைச்சின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
சிறப்புக் கல்வித் துறையில் ஆசிரியர், முதன்மை ஆசிரியர், மூத்த ஆசிரியர் என வகுப்பாசிரியர்கள் பதவி உயர்வு பெற்று முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆசிரியராகப் பணியில் சேர்பவர்கள் கற்பித்தல், கற்றல், வழிகாட்டுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துவர்.
இதுபோன்ற கட்டமைப்பும் பதவிகளும் இப்போதும் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் பள்ளிக்கு பள்ளி அவை வேறுபடுகின்றன.
வரும் ஆண்டுகளில், சிறப்புக் கல்வித் துறையின் வாழ்க்கைத் தொழிலை கவர்ச்சிகரமானதாக ஆக்கி ஆசிரியர்களுக்கு மாறுபட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம் என்றும் துணை அமைச்சர் சுன் கூறினார்.
ஆசிரியர்களின் சம்பளம் ஆசிரியர்களுக்குப் பொருந்துமாறு மதிப்பாய்வு செய்து சந்தையின் போட்டித்தன்மைக்கு ஏற்ப இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

