பிரதமர் லீ: 'சர்ச்சையைப் கிளப்பவே இந்தப் படம்'

2 mins read
1f23947d-2f8d-4b7c-a0d9-52f78db0d449
இந்தியாவின் டிபிஎஸ் வங்கிக் கிளையில் எடுக்கப்பட்ட படம் சிங்கப்பூரில் எடுக்கப்பட்டது என்ற பொய்த்தகவல் குறித்து பிரதமர் லீ கருத்துரைத்துள்ளார். -

டிபிஎஸ் வங்கியின் இந்திய ஊழியர்கள் பலருடன் அவ்வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குப்தாவைக் காட்டும் ஒரு படம், சிங்கப்பூர் வங்கிகளில் வெளிநாட்டு பணியாளர்கள் பணியாற்றுவது குறித்த விவகாரத்தை மிகைப்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாக சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருக்கிறார்.

கடந்த செப்டம்பரில் இந்தப் படம் முதலில் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது. 'ஐ சைட் டெஸ்' ( 'கண்பார்வைக்கான சோதனை' என்பது அதன் பொருள்) என்ற தலைப்பு அந்தப் படத்திற்கு வைக்கப்பட்டிருந்தது. "இங்கே சிங்கப்பூரர் அல்லது சீனர்கள் எவரேனும் உள்ளனரா?" என்ற வாக்கியம் அந்தப் பதிவில் இணைக்கப்பட்டிருந்தது.

இந்தப் படம் சிங்கப்பூர் வங்கியில் எடுக்கப்பட்டதுபோல இதனுடன் இணைக்கப்பட்டுள்ள வாசகங்கள் சித்திரிக்க முயன்றாலும் உண்மையில் அந்தப் படம் மும்பையில் செப்டம்பர் 2017ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டிருந்ததாகப் பிரதமர் லீ கூறினார்.

"இந்தப் படம் அண்மையில் மீண்டும் பரவத் தொடங்கி இணையத்தில் சூடுபிடித்துள்ளது. சிரமமான காலக்கட்டங்களில் இந்த விவகாரம் அதிக பாதிப்பு ஏற்படுத்துவதை இது காட்டுகிறது," என்றார் பிரதமர்.

"கடந்தாண்டு செப்டம்பர் இருந்த உலகமே வேறு. மனம் புண்பட்ட பலர் கோபமடைந்து டிபிஎஸ் வங்கியைப் பற்றி கடுமையாக விமர்சித்தனர். இதனை நன்கு தெரிந்தே பதிவை உருவாக்கியவர் இப்படத்தை மீண்டும் வெளியிட்டார். இந்த வீஃபீ (wefie) படத்தை அவர் பொறுப்பில்லாமல் பயன்படுத்தி, சிங்கப்பூரிலுள்ள டிபிஎஸ், சிங்கப்பூரர்களை நியாயமாக நடத்தவில்லை என்ற மறைமுகமாகச் சொல்ல முற்பட்டார்.

பொருளியலை கொவிட்-19 பாதித்துவருவதால் தங்களது பணிகளில் நிச்சயமற்ற சூழலை திறனாளர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்கள் எதிர்நோக்குவதால் இங்கு வெளிநாட்டு திறனாளர்கள் குறிப்பிட்ட சில துறைகளில் வேலை செய்யும் விவகாரம் மிகைப்படுத்தப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார். சர்ச்சையை மூட்டும் சிலர் இருப்பதை அறிவதாகவும் அவர் சொன்னார்.