பதிவுகளில் தவறு; சிறைக்கைதியிடம் நீதிமன்றம் மன்னிப்பு கேட்டது

1 mins read
be26b75f-f63f-47b0-b69b-b232e55a2292
-

தாம் அபராதம் செலுத்திய விவரம் அதிகார பதிவுகளில் முறையாகச் சேர்க்கப்படாததால் சிறையில் கூடுதலாக இரண்டு நாட்கள் தங்கிய லாரி ஓட்டுநர் டியோ செங் டியோங்கிடம் அரசு நீதிமன்றம் மன்னிப்பு கேட்டுள்ளது.

தனது லாரியால் சைக்கிளோட்டி ஒருவர் மீது மோதி 24 மணி நேரத்திற்குள் அது குறித்து போலிசாரிடம் தெரிவிக்கவில்லை. இந்தக் குற்றத்திற்காக 59 வயது டியோவிற்கு இவ்வாண்டு ஜனவரி 14ஆம் தேதி ஏழு வாரச் சிறைத்தண்டனையுடன் 500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

டியோவின் மேல் முறையீட்டை உயர்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து ஜூலை 20ஆம் தேதி அவரது சிறைத்தண்டனைக்கான காலம் தொடங்கியது. டியோ, அபராதத்தைக் கட்டிவிட்டதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தபோதும் நிர்வாகத் தவறுகளால் அந்தத் தகவல் அரசு நீதிமன்றங்களின் பதிவுகளில் சேர்க்கப்படவில்லை.

அபராதத்தைக் கட்ட முடியாவிட்டால் டியோ கூடுதலாக மூன்று நாட்களுக்கு சிறையில் இருக்கவேண்டும் என்று அவரைத் தண்டித்தபோது அரசு நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. எனவே டியோ அந்த அபராதத்தை இன்னமும் கட்டவில்லை என்று நீதிமன்றப் பதிவுகள் காட்டியிருந்ததால் அவர் சிறையில் கூடுதலாக இரண்டு நாட்கள் தங்க நேரிட்டது.

"நடந்தது குறித்து அரசு நீதிமன்றம் ஆழமாக வருந்துகிறது. தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் வழியாக நாங்கள் அவருக்கு மன்னிப்புக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளோம்," என்று அரசு நீதிமன்றம் தனது அறிக்கையில் கூறியது.