சிங்கப்பூரர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்பட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும். புதுப்புது யோசனைகளுக்கு அவர்கள் ஒற்றுமையாக உரு கொடுக்க வேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிகழ்ச்சி நிரலை அரசாங்கமே நிர்ணயித்து அது பற்றி பொதுமக்களிடம் இருந்து கருத்து கேட்பது எப்போதுமே நடப்பில் இருந்து வரமுடியாது என்று குறிப்பிட்ட அவர், புதுப்புது யோசனைகளுடன் சமூகம் முன்வந்து எவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதைப் பற்றி முடிவுசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அரசாங்கம் அவற்றுக்கு ஆதரவு தரும் என்று சமூகச் சேவை களின் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு லீ கூறினார். கடந்த பிப்ரவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட இளையர் மனநலக் கட்டமைப்பு என்ற ஒரு திட்டத்தை அவர் முன்னுதாரணமாகச் சுட்டினார்.
பொருளியல் துறையில் வளர்ச்சிக்கான புதுப்புது யோசனைகளை உடனடியாக உருவாக்கி சோதித்துப் பார்க்கும் நோக்கத்தில் செயல் கூட்டணி என்ற ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.
சமூகத் துறைக்கான புதிய செயல் கட்டமைப்பு ஒன்று ஜூன் மாதம் உருவாக்கப்பட்டதையும் அவர் மேற்கோள் காட்டினார்.
அரசாங்கத்திற்கும் சிங்கப்பூரர்களுக்கும் இடையில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மூலம் மேலும் பல கருப்பொருட்கள் உருவாகி இன்னும் அதிக செயல் கட்டமைப்புகளை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார். இன்னும் சிறந்த சிங்கப்பூரை உருவாக்குவதற்கு இடம்பெறும் தொடர் முயற்சிகளில் பங்கு கொள்ளுமாறு எல்லா சிங்கப்பூரர்களுக்கும் அமைச்சர் திரு லீ அழைப்பு விடுத்தார்.
பருவநிலை மாற்றம், மின்னியல் தொழில்நுட்பம், குறைந்த வருமானக்காரர்களுக்கும் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கும் உதவுவது போன்ற துறைகளில் புத்தாக்கம், யோசனை, விருப்பத்துடன் ஈடுபடும்படி இளையர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
முதியோர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் அனுபவமும் அறிவும் போராடும் உணர்வும் தொடர்ந்து தேவைப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். அதேவேளையில், நிறுவனங்களும் ஊழியர்களும் மாற்றங்கள், உருமாற்றங்களுக்கு ஏற்ப உடனடியாக மாறிக்கொள்ளும் திறமையுடன் அவர்கள் திகழ வேண்டும் என்றார் அவர்.

