கேலாங் லோரோங் 27ல் உள்ள ஒரு குடியிருப்பில் அதிகாரிகள் நேற்று முன்தினம் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் $410,000 மதிப்புள்ள போதைப்பொருட்களும் கத்திகள், பேஸ்பால் மட்டை உள்ளிட்ட ஆயுதங்களும் சிக்கின.
அத்துடன், 15,830 வெள்ளி ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளும் சிங்கப்பூர் போலிஸ் படையினரும் இணைந்து மேற்கொண்ட அந்தச் சோதனையின்போது, சந்தேகத்துக்குரிய போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பில் 28 மற்றும் 48 வயது நிரம்பிய இரு சிங்கப்பூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தங்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காததை அடுத்து, அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அந்த வீட்டிற்குள் புகுந்தனர்.
"அவ்விரு ஆடவர்களையும் அதிகாரிகள் கைதுசெய்ய முயன்றபோது, அவர்கள் கடுமையாகப் போராடினர். அதனால், தேவையான பலத்தைப் பயன்படுத்தி அவர்களை அடக்க வேண்டியதாயிற்று," என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று ஓர் அறிக்கை மூலமாகத் தெரிவித்தது.
1,302 கிராம் 'ஐஸ்', 56 கிராம் ஹெராயின், 1,000 எரிமின்-5 மாத்திரைகள், ஏழு 'எக்ஸ்டசி' மாத்திரைகள் ஆகிய போதைப்பொருட்களும் இன்னும் பல போதைப்பொருள் துணைச் சாதனங்களும் அவ்வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.
கூரிய நகம் போலக் காணப்படும் 'கரம்பிட்' கத்தி, ஒரு பாராங் கத்தி, ஒரு பேஸ்பால் மட்டை ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருள், 744 போதைப் புழங்கிகளுக்கு ஒரு வாரத்திற்குப் போதுமானது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

