கொவிட்-19 நோயாளிகள் தொற்றைப் பரப்பக்கூடிய நிலையில் இருந்தபோது சென்றிருந்த இடங்களின் பட்டியலில் பல ஆர்ச்சர்ட் சாலை பேரங்காடிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் விஸ்மா ஏட்ரியா, தி செண்டர்பாய்ண்ட், நீ ஆன் சிட்டி, லக்கி பிளாசா போன்றவை அடங்கும்.
இவற்றுடன் செங்காங் வட்டாரத்தில் உள்ள 'கம்பஸ் ஒன்' ஜூவல் சாங்கி விமான நிலையம், நெக்ஸ் பேரங்காடி ஆகியவையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
'நெக்ஸ்' முன்னரே பட்டியலில் இருந்ததை அடுத்து அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு மீண்டும் ஒரு கொவிட்-19 நோயாளி சென்றிருப்பது தெரிய வந்தது. 'புளூ ஸ்டார்ஸ்' தங்கும் விடுதி தொடர்பில் புதிய கிருமித்தொற்று குழுமம் உறுதியாகியுள்ளது. குறைந்தது 33 பேர் இந்த குழுமத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, மேலும் 34 பேருக்கு இன்று கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியானதில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56,982 ஆக உயர்ந்துள்ளது.
புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் மூன்று சமூகத் தொற்று அடங்கும். வெளிநாட்டிலிருந்து வந்த இருவரும் இப்புதிய சம்பவங்களில் அடங்குவர்.
சமூக அளவில் பதிவான தொற்று சம்பவங்களில் ஒருவர் சிங்கப்பூரர் என்றும் மற்ற இருவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
வெள்ளிக்கிழமையன்று 40 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன. சமூக அளவில் தொற்று சம்பவம் இல்லை.
இந்தியாவிலிருந்து வந்த மூவருக்குக் கிருமித்தொற்று இருந்ததாகவும் எஞ்சிய 37 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மூவரில் ஒருவர் சிங்கப்பூரர். இன்னொருவர் நிரந்தரவாசி. எஞ்சியவர் குறுகிய கால வருகை அனுமதி அட்டை உடையவர். இவரது மனைவி இங்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்பட்டதாக அமைச்சு கூறியது. மருத்துவமனைகளில் கொவிட்-19 தொடர்பில் சிகிச்சை பெறுவோர் மொத்தம் 51 என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் இல்லை. அத்துடன் சமூக வளாகங்களில் 696 பேர் தங்கியுள்ளனர்.

