கொவிட்-19 ஏற்படுத்தி வரும் பாதிப்புகளிலேயே அதிக கவலை தருவதாக இருப்பது வேலைதான். மேலும் ஆட்குறைப்பு இருக்குமோ என்ற அச்சம் இல்லாத நாள் இல்லை.
கிருமித்தொற்று காரணமாக ஏறக்குறைய எல்லா துறைகளுமே முடங்கிப்போய் கிடப்பதால் அவை எல்லாம் தலையெடுக்கும் காலமும் வேலைவாய்ப்புகள் மறுபடியும் அதிகரிக்கும் காலமும் வெகுவிரைவில் கனிந்து வருவதற்கான அறிகுறியும் தெரியவில்லை.
வேலை பாணிகளும் மாறி இருக்கின்றன. கொவிட்-19க்குப் பிறகு சில வகை வேலைகள் இருக்குமா என்பதுகூட தெரியவில்லை.
ஆகையால் எதிர்காலத்தில் வேலை பெற வேண்டுமானால் புதிதாக எந்தெந்த தகுதிகள் தேவைப்படும் என்பதையும் துல்லியமாகக் கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இவை எல்லாம் ஊழியர்களை, வேலை தேடுவோரை, வேலை இழந்தவர்களை மேலும் பயமுறுத்துவதாக இருக்கின்றன.
பல பிரம்மாண்ட உலகளாவிய நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் ஆட்குறைப்பில் இறங்கி இருக்கின்றன. அமெரிக்காவின் 'போயிங்' நிறுவனமும் சிங்கப்பூரின் 'எஸ்ஐஏ இஞ்ஜினியரிங் கம்பெனி' நிறுவனமும் சேர்ந்து 'போயிங் ஆசிய பசிபிக் ஏவியேஷன்ஸ் சர்விசஸ்' என்ற கூட்டுத்தொழிலை நடத்தி வருகின்றன. இந்தக் கூட்டு நிறுவனம் 13 விழுக்காடு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் சிங்கப்பூரில் காற்றாடி தகடுகளைத் தயாரித்து வந்தது. இப்போது இந்தத் தொழிலில் சிலவற்றை பிரிட்டனுக்கே அது இடம் மாற்றுகிறது. 240 ஊழியர்களையும் வேலையில் இருந்து நீக்கிவிட்டது.
இப்படி வேலை நிலவரங்கள் மோசம் அடைந்து வருவதால் சிங்கப்பூரில் சிங்கப்பூரர்களை மையமாகக் கொண்ட ஊழியர் அணியை வலுப்படுத்த வேண்டியது அரசாங்கத்திற்கும் முதலாளிகளுக்கும் முன்பைவிட இப்போது முக்கியமானதாகி இருக்கிறது.
இதன் காரணமாகத்தான் 'எம்பிளாய்மெண்ட் பாஸ், 'எஸ் பாஸ்' ஆகியவற்றுக்கான அடிப்படை ஊதியத்தை உயர்த்துவது என்று அரசாங்கம் அண்மையில் முடிவு செய்து இருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை இரண்டு முறை இந்த ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இது சரியான திசையில் எடுக்கப்பட்ட முடிவாகத் தெரிகிறது.
நிறுவனங்கள் கூடுமான வரையில் தகுதி உள்ள, பொருத்தமான சிங்கப்பூரர்களுக்கு முதலில் வாய்ப்பளித்துவிட்டு அதற்குப் பிறகுதான் வெளிநாட்டினரை அவை தேட வேண்டும்.
இதைத்தான் அரசாங்கத்தின் புதிய முடிவு நிறுவனங்களுக்கு நினைவூட்டுகிறது.
காலம் நல்ல நிலையில் இருக்கும்போது சிங்கப்பூரர்களை மையமாகக் கொண்ட ஊழியர் அணியை உருவாக்கி தக்கவைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியமானது. அதேவேளையில், காலம் பாதகமாக இருக்கையில் இப்படிச் செய்யவேண்டியது உயிர்நாடி போன்றது.
இத்தகைய அனுமதிகளின் பேரில் வெளிநாட்டினரை வேலையில் அமர்த்திக்கொள்ள சில நிறுவனங்களுக்குச் செலவு அதிகமாகும். சிங்கப்பூர் ஊழியர்கள் எந்த அளவுக்குப் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதை பிரதிபலிப்பதாகவே இந்த முடிவு இருக்கிறது.
சிங்கப்பூரில் முன்பைவிட அதிகமான ஊழியர்கள் வேலை பார்க்கும் நேரமும் குறைந்து இருக்கிறது. அவர்கள் வேறு உபரி வேலைகளைத் தேட வேண்டிய சூழலும் ஏற்பட்டு இருக்கிறது.
சிங்கப்பூரும் இந்தியாவும் தங்களுக்கு இடையில் பரந்த பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாட்டைக் கொண்டிருக்கின்றன. இந்தியர்கள் சிங்கப்பூருக்கு வந்து வேலை பார்க்கவும் வசிக்கவும் அந்த உடன்பாடு உரிமை வழங்குகிறது என்ற தவறான கருத்துகள்கூட அண்மையில் தலைதூக்கின.
சிங்கப்பூருடன் இத்தகைய உடன்பாடுகளைச் செய்துகொண்டுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்கு வந்து வேலை பார்க்கவும் வசிக்கவும் அத்தகைய உடன்பாடுகள் உரிமை தருகின்றன என்று நிலவிய தப்பெண்ணங்களை அரசாங்கம் அண்மையில் போக்கி இருக்கிறது.
அரசாங்கம் அளித்த அந்த விளக்கம், வேலை என்று வரும்போது எப்போதுமே சிங்கப்பூரர்களுக்குத்தான் முதலிடம் என்பதை தெள்ளத்தெளிவாக மக்களுக்கு தெரியப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரை பொறுத்தவரை, உள்ளூர் ஊழியர் அணிக்கு உறுதுணையாகத்தான் தரமான, ஆற்றல் மிகுந்த வெளிநாட்டினர் அனுமதிக்கப்படுகிறார்கள். இதுவே சிங்கப்பூரின் வெளிநாட்டு ஊழியர் கொள்கை.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் பிரச்சினை அண்மையில் புதிய நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்பட்டது. உறுப்பினர்கள் பலரும் சிங்கப்பூர்களை மையமாகக் கொண்ட அணியைப் பாதுகாக்க அரசாங்கம் மேலும் பலவற்றைச் செய்யவேண்டும் என்று கேரிக்கை விடுத்தனர்.
தங்கள் அலுவலகங்களில் தங்களைவிட அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர் வேலை பார்க்கிறார்கள் என்றும் தங்களுக்குக் கிடைக்காத வேலை வெளிநாட்டினருக்குக் கிடைத்ததாகவும் மக்கள் கூறியதாக உறுப்பினர்கள் பலரும் மன்றத்தில் குறிப்பிட்டனர்.
வெளிநாட்டினருக்கு கொடுக்கப்படும் 'ஒர்க் பாஸ்' எனப்படும் அனுமதிகள் தொடர்பான கொள்கைகள் கடுமையாக இல்லையோ என்றுகூட மக்கள் கேட்டதாக மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவற்றுக்கெல்லாம் பிரதமர் லீ சியன் லூங் பதில் அளித்தார்.
வேலை என்று வரும்போது எப்போதுமே குடிமக்களுக்குத்தான் முதல் முன்னுரிமை அளிக்கப்படும். முதல் உதவி அவர்களுக்குத்தான் கிடைக்கும் என்று பிரதமர் லீ நாடாளுமன்றத்தில் உறுதி கூறினார்.
அதேவேளையில், வெளிநாட்டினருக்கு முற்றிலும் கதவைச் சாத்திவிட முடியாது என்றும் அவர் விளக்கினார். சிங்கப்பூரர்களுக்கு எவ்வித பலனும் இல்லை எனில் இங்கு வெளிநாட்டினருக்கு வேலைகளை உருவாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றார் பிரதமர் லீ.
உலகம் முழுவதும் இருந்து ஆற்றல்மிக்கவர்களுக்குக் கதவுகளைத் திறந்து வைத்து அதன்மூலம் நாம் நமக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறோம் என்று பிரதமர் விளக்கம் அளித்திருந்தார்.
நம்முடைய பொருளியலை வளர்த்து சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்குவதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும்தான் நமது இலக்கு. இதைச் சாதிக்க நமக்கு வெளிநாட்டு ஊழியர்களும் 'ஒர்க் பர்மிட்' அனுமதியின் பேரில் இங்கு பணியாற்றுவோரும் உதவுகிறார்கள்.
சிங்கப்பூர் தனது பொருளியல் போட்டித்திறனை உலக அளவில் மேம்படுத்தி அதைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இது கட்டாயமானது.
வெளிநாட்டு ஊழியர்கள் போட்டியாக இருப்பதைத் தடுப்பது அல்ல நோக்கம். மாறாக அத்தகைய ஒரு போட்டி உள்ளூர் ஊழியர்களுக்குப் பாதகமான முறையில் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதுதான் இதில் நியாயமான, அவசியமான அணுகுமுறையாக இருக்கும்.
முதலாளிகள் எந்தவொரு சூழ்நிலையிலும் உள்ளூர் ஊழியர்களை நியாயமாக நடத்த வேண்டியது கட்டாயமான ஒன்று. அதுவும் கொவிட்-19 சூழலில் முதலாளிகளுக்குத் தார்மீக கடமையாகவும் இது இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

