தேசிய பூங்காக் கழகம் புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறது. The Youth @ SGNature என்ற அந்தச் செயல்திட்டம் மூலம் இளம் சிங்கப்பூரர்கள் பலதரப்பட்ட தாவர வளங்களைக் கட்டிக்காப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
அதோடு, தாவர வளத்தைப் பாதுகாப்பதிலும் அவர்கள் பங்கெடுத்துக் கொள்ளலாம். பல்வேறு செயல்திட்டங்கள் மூலம் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 25,000 இளையர்களை எட்ட வேண்டும் என்பது இந்தச் செயல்திட்டத்தின் இலக்கு.
நில வடிவமைப்பு, பன்மய தாவர வளம் பற்றிய ஆய்வுகளை நடத்துவது, மதியுரை நிகழ்ச்சிகள் போன்ற பலவும் இத்தகைய செயல்திட்டங்களில் உள்ளடங்கும்.
இப்போது இத்தகைய பசுமைப் பாதுகாப்புத் திட்டங்களில் 11,000 இளையர்கள் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். தனது புதிய திட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ள இருக்கும் இளையர்களுக்கு வயது 15 முதல் 25 என்று தேசிய பூங்காக் கழகம் தெரிவித்து இருக்கிறது.
இந்தக் கழகம் தன்னுடைய செயல் திட்டங்கள் மூலம் அனைத்து நிலைகளையும் சேர்ந்த 130,000 மாணவர்களை எட்டி வருகிறது.
இயற்கை நகராக சிங்கப்பூரை கட்டிக்காக்கும் உருமாற்றத் திட்டத்தில் இளையர்கள் பங்கெடுக்குமாறு செய்ய மேலும் பலவற்றை நாம் செய்ய வேண்டி இருக்கிறது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
ஒரு மாத காலம் நடக்கும் உயிரியல் பன்மய இணைய விழாவைத் தொடங்கி வைத்து காணொளி மூலம் அமைச்சர் உரையாற்றினார்.
இளம் சிங்கப்பூரர்களை இயற்கை வளம் மற்றும் பசுமை தொண்டூழியர்களாக பேணி உருவாக்கும் வகையில் அவர்களைத் தீவிரமாக ஈடுபடுத்துவது கழகம் தொடங்கி இருக்கும் புதிய முயற்சியின் இலக்கு என்று ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்று தொடங்கிய உயிரியல் பன்மய விழா செப்டம்பர் 26 வரை நீடிக்கும். கொவிட்-19 காரணமாக அது பெரும்பாலும் இணையம் வழியே இந்த ஆண்டு நடக்கும்.
இந்தக் கழகம் 'இயற்கை வள சமூகப் பள்ளிகள் விருது' என்ற ஒரு புதிய விருதைத் தொடங்கி இருக்கிறது. அந்த விருதை வழங்கி நேற்று 25 கல்வி நிறுவனங்களும் மாணவர்களும் போதனையாளர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.
இயற்கை ஆர்வலர்களின் யோசனைகள், கருத்துகள், தகவல்களைக் கொண்ட இரண்டு புத்தகங்களும் வெளியிடப்பட்டன.

