உள்ளூர்வாசிகளுக்கு காத்திருக்கும் 36,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

உள்ளூர்வாசிகளுக்கு காத்திருக்கும் 36,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

2 mins read
4e0dbcc1-1449-4a08-ba15-11b0ce3f967e
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வர்த்தக ஆய்வாளர்கள் முதல் திட்ட மேலாளர்கள் வரை உயர்மட்ட வேலைகள் அடங்கும் 36,000 வேலை வாய்ப்புகள் 'மைகரியர்ஸ்ஃபியூச்சர்.எஸ்ஜி' (MyCareersFuture.sg) இணையத்தளத்தில் உள்ளூர்வாசிகளுக்கென காத்திருக்கின்றன.

இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த வேலை வாய்ப்புகளில் பத்தில் ஒன்றுக்கான மாத சம்பளம் $10,000க்கு மேலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அத்துடன் பத்தில் நான்கு வேலைகளுக்கு மாதம் $5,000 அல்லது அதைவிட அதிகம் என்றும் அறியப்படுகிறது.

இந்த 36,000 வேலை வாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, நிரந்தர வேலைகளுக்குரியவை என்றும் கூறப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம் மற்றும் நிதித் துறைகளைச் சார்ந்தவையாக பெரும்பாலான வேலை வாய்ப்புகள் அமைந்துள்ளன.

கொவிட்-19 கொள்ளைநோய் ஏற்படுத்தியுள்ள தாக்கத்திலும் சில நிறுவனங்கள் அவற்றின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் இந்த இரு துறைகள் தொடர்பானவை.

உள்ளூர்வாசிகளுக்காக 100,000 வேலைகள், வேலைப் பயிற்சிகள், திறன் பயிற்சிகள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதற்காக மே மாதத்தில் 'எஸ்ஜி ஒற்றுமை வேலைகள், திறன்களுக்கான தொகுப்புத்திட்டம்' அறிவிக்கப்பட்டது.

இதன் கீழ் இந்த 36,000 வேலை மற்றும் பயிற்சி வாய்ப்புகள் திட்டம் அடங்கும்.

வேலைக்கான விளம்பரங்கள் பெரும்பாலும் 'பிஎம்இ' எனப்படும் நிபுணர், மேலாளர், நிர்வாகி என்ற நிலைகளுக்குரியவை என்று சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு தெரிவித்தது.

வேலை தொடர்பான மற்ற இணையத்தளங்கள், 'பிஎம்இ' அல்லாத வேலைகளை விளம்பரப்படுத்தி வருகையில் 'மைகரியர்ஸ்ஃபியூச்சர்.எஸ்ஜி' அதற்கு மாறுபட்டிருக்கிறது.

இருப்பினும், வேலைக்கு ஆளை நியமித்ததை அடுத்து, நிறுவனங்கள் உடனுக்குடன் இணையத்தளத்தில் தெரிவிப்பதில்லை என்றும் அமைப்பு இதைப் பற்றி பலமுறை நினைவுறுத்தி வருகிறது என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய வேலைச் சந்தை இடைவெளிகளைப் பிரதிபலிக்கும் வகையில் இணையத்தளத்தின் வேலைகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், நிபுணத்துவச் சேவைகள், மொத்த விற்பனை வர்த்தகம், நிதிச் சேவைகள், மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆகியவற்றில் ஆக அதிக வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாக அமைப்பு தெரிவித்தது.

குறிப்பாக மென்பொருளை உருவாக்குபவர்கள், வர்த்தக ஆய்வாளர்கள், தாதியர், பாலர் பள்ளி ஆசிரியர்கள், உணவக மேலாளர்கள் போன்ற வேலைகளை நிரப்ப முதலாளிகள் மும்முரமாக முயன்று வருவதாக அமைப்பு கூறியது.

இவ்வேலைகளில் சிலவற்றை நிரப்ப உள்ளூர் திறனாளிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வேலைக்குப் பொருந்தாத திறன்கள் மற்றும் வெளிநாட்டு மனிதவளக் கட்டுப்பாடுகளை இறுக்குதல் போன்ற காரணங்களால் இந்தத் தட்டுப்பாடு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஒரு சில வேலைகளுக்கு மட்டும் 200க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்வதாக தெரிவிக்கப்பட்டது.

திட்ட மேலாளர்கள், வர்த்தக ஆய்வாளர்கள், விற்பனைச் சந்தை நிர்வாகிகள், கணக்காய்வாளர்கள், மனிதவள நிர்வாகிகள் போன்ற வேலைகளுக்கு அமோக வரவேற்பு இருப்பது தெரிய வந்துள்ளது.