கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது சிங்கப்பூரர்கள் பலரும் வீட்டில் இருந்தபடி வேலை பார்த்தார்கள்; அல்லது வீட்டில் இருந்தபடி இணையம் வழி படித்தார்கள்.
அந்தக் காலகட்டத்தில் எம்1 மற்றும் ஸ்டார்ஹப் நிறுவனங்களின் இணையச் சேவைகள் தடைபட்டன. இதற்காக அந்த நிறுவனங்களுக்கு மொத்தம் $610,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
எம்1 நிறுவனத்தின் சேவைகள் மே மாதம் தடைபட்டன. இதற்காக அந்த நிறுவனத்துக்கு $400,000 அபராதமும் ஏப்ரல் மாதம் ஸ்டார்ஹப் சேவை தடைப்பட்டதற்காக அந்த நிறுவனத்துக்கு $210,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் இந்த விவரங்களைத் தெரிவித்தது. இந்த இரண்டு நிறுவனங்களுமே தகவல் தொடர்பு நியதிகளை மீறி இருக்கின்றன என்று ஆணையம் குறிப்பிட்டது. ஸ்டார்ஹப் சேவை ஏப்ரல் 15ஆம் தேதி தடைபட்டது. 250,000 பேர் பாதிக்கப்பட்டனர்.
எம்1 சேவை மே 12ஆம் தேதியும் மே13 ஆம் தேதியும் இரண்டு முறை தடைபட்டது. சுமார் 20,000 வாடிக்கையாளர்கள் ஆறு மணி நேரம் பாதிக்கப்பட்டனர் என்று ஆணையம் தெரிவித்தது.
சேவைத் தடை நீடித்த நேரம், அதன் தாக்கம், பாதிப்பை அகற்ற நிறுவனங்கள் எடுத்த நடடிக்கை கள் ஆகியவற்றின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
இதனிடையே, இணையச் சேவை தடைபட்டதற்காக எம்1 நிறுவனமும் ஸ்டார்ஹப் நிறுவனமும் நேற்று வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டன.
இத்தகைய தடைகள் இனியும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளப்போவதாக இரண்டும் உறுதி அளித்துள்ளன.


