மாணவர்களுக்கு ஆசிரியராக மட்டுமன்றி, தாயாக, தந்தையாக, பாதுகாவலராக, நண்பராக விளங்கும் ஆசிரியர்களைச் சிறப்பித்து அவர்களுக்கு நன்றி செலுத்தும் நோக்கத்தில் கல்வி அமைச்சு சிங்போஸ்ட்டுடன் இணைந்து ஆறு தபால்தலைகளை வெளியிட்டிருக்கிறது.
மாணவர்களுக்கு இந்த கொரோனா கிருமித்தொற்று காலத்தில் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதை விளக்கும் வகையில் அதிரடி நாயகர்களின் படங்கள் இத்தபால் தலைகளில் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களிடையே கொரோனா கிருமி பரவாமல் இருக்க ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் முக்கிய பங்கிற்குப் புகழாரம் சூட்டும் வகையில் இவை வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்களை இந்த கொரோனா கிருமித்தொற்று காலத்தில் ஆசிரியர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்கின்றனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் நோக்கத்தில் சுமார் 33,000 ஆசிரியர்களுக்கு இந்தப் புதிய தபால்தலைகளைக் கொண்ட கடித உறை இன்று முதல் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்தத் தபால்தலைகளைக் கொண்ட தொகுப்பில் வைரஸ் ஸ்கிரீனர் வருண், மாஸ்க் அப் மெய் மெய், சூப்பர் சோப்பர் சோஃப்பி, ஹேண்ட்ஸ் டௌன் ஹெனா, வைப் அப் வில்சன் என்று ஐந்து அதிரடி நாயகர்கள் இருக்கிறார்கள்.
இந்தத் தபால்தலைகள் மூலம் எதிர்கால சந்ததியினர் இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழலில் இருந்து சிங்கப்பூர் மீண்டு வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள்.
"கொரோனா தொற்று காலத்தில் எங்களுடைய ஆசிரியர்களும் பள்ளி ஊழியர்களும் மாணவர்களிடம் நோய் பரவாமல் இருக்க அவர்களைப் பாதுகாப்பதிலும் அதே சமயம் அவர்களைக் கற்றலில் ஈடுபடுத்துவதிலும் முன்னிலை வகிக்கிறார்கள். அவர்கள்தான் உண்மையான அதிரடி நாயகர்கள்.
அவர்களின் இந்தத் தன்னலமற்ற மகத்தான சேவையைக் கௌரவிக்கும் விதத்தில் இந்த ஆசிரியர் தினத்தில் சிங்போஸ்ட்டுடன் இணைந்து இந்த தபால்தலைகளை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்," என்று கல்வி அமைச்சின் தொடர்பு, மக்கள் ஈடுபாட்டுப் பிரிவின் ஒருங்கிணைப்பு இயக்குநர் டான் வாய் லாய் கூறினார்.
ஒவ்வொரு தபால்தலையின் விலை 30 காசிலிருந்து 70 காசு வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தபால்தலைத் தொகுப்புகள் தலா $5.55க்கு விற்கப்படுகின்றன.
இப்புதிய தபால்தலைகளை அனைத்து அஞ்சல் நிலையங்கள், தபால் தலைகளை விற்கும் கடைகள், shop.singpost.com இணையத்தளம் ஆகியவற்றிலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.

