முன்னதாக, கேஸியா@பெஞ்சுரு, சிடிபிஎல் துவாஸ் தங்குவிடுதி, கிராஞ்சி விடுதி 1 என மூன்று புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகியிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.வெளிநாட்டு ஊழியர் விடுதிகள் அனைத்தும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டபோதும் அவ்விடங்களில் புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவெடுத்து வருகின்றன.
இவற்றுடன் சேர்த்து, கடந்த வாரத்தில் மட்டும் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் 12 புதிய கொரோனா தொற்றுக் குழுமங்கள் மீண்டும் தலைகாட்டின. கோக்ரன் விடுதி I & II, மண்டாய் விடுதி I, துவாஸ் சவுத் விடுதி, புளூ ஸ்டார்ஸ் விடுதி, வெஸ்ட்லைட் தோ குவான் விடுதி, சாங்கி விடுதி II, நார்த் கோஸ்ட் விடுதி, தோ குவான் விடுதி ஆகியவை மற்ற ஒன்பது விடுதிகள்.
வேலை அனுமதி அட்டை ஊழியர் ஒருவர், வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்கள் மூவர் என நேற்று முன்தினம் சமூகத்தில் நால்வரை கொரோனா தொற்றியது. அவர்களில் இருவர், ஏற்கெனவே கிருமி தொற்றியவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.அதேபோல, சிங்கப்பூரர்கள் நால்வர், வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஒருவர், வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்கள் ஐவர், மாணவர் அனுமதி அட்டையில் உள்ள ஒருவர் என வெளிநாடுகளில் இருந்து வந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் நாடுகளைச் சேர்ந்த அவர்கள் கடந்த மாதம் 23-26ஆம் தேதிகளுக்குள் இங்கு வந்தனர்.
இதனிடையே, ராஃபிள்ஸ் ஹாலந்து V கடைத்தொகுதியில் உள்ள ஹோஷினோ காப்பிக் கடை, ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஒயிட் உணவகம் ஆகியவை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வந்த இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டன. சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் முழுமையான பட்டியலைப் பார்க்கலாம்.
கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட 66 பேர் நேற்று முன்தினம் மருத்துவமனை அல்லது சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து, இதுவரை 56,318 பேர் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டுவிட்டனர். இன்னும் 51 பேர் மருத்துவமனையிலும் 611 பேர் சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களிலும் உள்ளனர். சிங்கப்பூரில் கொரோனாவால் இதுவரை 27 பேரும் தொற்று கண்டிருந்தபோது வேறு காரணங்களால் 15 பேரும் மாண்டுவிட்டனர்.

