பொருளியல் 6% சுருங்கும் என கணிப்பு

பொருளியல் 6% சுருங்கும் என கணிப்பு

2 mins read
50abf8a7-6caf-4310-87c4-a67d21045ad2
-

இவ்வாண்டில் நாட்டின் பொருளியல் 6% சுருங்கக்கூடும் என சிங்கப்பூர் நாணய ஆணையம் மேற்கொண்ட காலாண்டு கருத்தாய்வில் பங்குபெற்ற 26 பொருளியல் வல்லுநர்களும் பகுப்பாய்வாளர்களும் தெரிவித்து இருக்கின்றனர்.

முந்தைய ஜூன் மாத கருத்தாய்வில் கணிக்கப்பட்ட 5.8% என்ற விகிதத்தைக் காட்டிலும் இது சற்று மோசமாக இருக்கிறது. இருப்பினும், அடுத்த ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.5% என வளர்ச்சி பெற்று, மீட்சியடையும் என்பது நிபுணர்களின் எதிர்பார்ப்பு. முன்னதாக, அவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8% வளர்ச்சி காணும் என்று கணித்திருந்தனர்.

நாணய ஆணையம் நேற்று வெளியிட்ட தனது கருத்தாய்வு அறிக்கையில் இந்தப் புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக, பொருளியல் 5% முதல் 7% வரை சுருங்கலாம் என வர்த்தக, தொழில் அமைச்சு கடந்த மாதம் தெரிவித்திருந்தது. அவ்வாறு நிகழ்ந்தால், நாடு சுதந்திரம் பெற்றபின் சந்தித்த ஆக மோசமான பொருளியல் மந்தநிலையாக இருக்கும். அடுத்த ஆண்டிற்கான அதிகாரபூர்வ முன்கணிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஆண்டு அடிப்படையில், இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் பொருளியல் 7.6% சரிவு காணலாம் எனப் பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இரண்டாம் காலாண்டில் பொருளியல் 13.2% சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ஜூலை-செப்டம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டிற்கான முன்னோடி மதிப்பீடுகள் இம்மாதப் பிற்பகுதியில் வெளியிடப்படலாம். கொவிட்-19 தொற்று மேலும் பரவுவது, தடுப்பூசி கண்டுபிடிக்க மேலும் தாமதமாவது, அமெரிக்கா-சீனா இடையிலான பதற்றநிலை அதிகரிப்பது ஆகியவற்றால் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். அதேபோல, உலகப் பொருளியல் எதிர்பார்க்கப்பட்டதைவிட மெதுவாக மீண்டு வருவது குறித்தும் நால்வரில் ஒருவர் கவலை தெரிவித்துள்ளனர்.

மாறாக, கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படுவது, எடுத்துக்காட்டாக உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவது சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக்குச் சாதகமாக அமையும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உற்பத்தித் துறையின் செயல்பாடு, குறிப்பாக மின்னணுச் சாதனங்கள், மருந்துப்பொருள் உற்பத்தி எதிர்பார்ப்பை விஞ்சுவதாக இருக்கும் என்றும் அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

நாணய ஆணையத்தின் அண்மைய கருத்தாய்வின்படி, இவ்வாண்டில் சிங்கப்பூர் பொருளியல் 5.1% முதல் 7% வரை சுருங்கலாம் எனச் சொல்லப்படுகிறது. வேலைச் சந்தையைப் பொறுத்தமட்டில், இவ்வாண்டு இறுதியில் வேலையின்மை விகிதம் 3.5%ஆக இருக்கும் என்றும் பொருளியல் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல, மூன்றாம் காலாண்டில் பயனீட்டாளர் விலைக் குறியீடு, ஆணையத்தின் மூலாதாரப் பணவீக்கம் ஆகியவை முறையே -0.6% மற்றும் -0.4 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.