மலேசியாவுக்கு நீண்ட காலப் பயணம் மேற்கொள்வோர் இனிமேல் தனிமைப்படுத்தும் இடங்களிலேயே தங்க வேண்டும்.
நாடு திரும்பிய மலேசியா நாட்டவர் ஒருவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மலேசிய அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
பிசிஏ எனப்படும் தவணை முறையிலான பயண ஏற்பாட்டின்கீழ் மலேசியாவுக்குள் நுழையும் பயணிகள் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
புதிய விதிமுறையின்படி அவர்கள், தனிமைப்படுத்தப்படும் வளாகங்களிலே தனிமைப்படுத்தப்படுவர் என்று மலேசியாவின் சுகாதார அமைச்சர் அதாம் பாபா நேற்று தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று மலேசியா திரும்பிய 35 வயது ஆடவர் ஒருவருக்கு கொவிட்-19 இருந்ததாக இம்மாதம் 2ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.
தனிமையில் அந்த ஆடவர் சிகிச்சை பெறுவதாகக் கூறிய திரு அதாம் பாபா, இனிமேல் பிசிஏ மூலமாக மலேசியாவுக்குத் திரும்புவோர் தனிமைப்படுத்தப்பட்ட வளாகங்களில் தங்கவைக்கப்படுவர் என்று நேற்று நடந்த செய்தியாளர் கூட்டம் ஒன்றில் அறிவித்தார்.
ஹோட்டல்களிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் தங்க வைக்கப்படுபவர்கள், அதற்கான செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் மலேசியாவும் சிங்கப்பூரும் எல்லைகளைத் திறந்தன.
முக்கியமான வர்த்தக அல்லது அதிகாரபூர்வ காரணங்களுக்காக 14 நாட்கள் வரை குறுகியகால பயணம் செய்வதற்கு 'ரெசிப்புரோக்கல் கிரீன் லேன்' (ஆர்ஜிஎல்) எனும் திட்டம் வகை செய்கிறது.
'பிசிஏ' போக்குவரத்து திட்டம், மலேசியக் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் மலேசியா திரும்பி நீண்டகாலம் தங்க அனுமதிக்கிறது.
இந்தத் திட்டத்தின் ஏற்பாட்டின்படி பயணிகள் தற்போது ஏழு நாட்கள் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், இந்த நடைமுறை விரைவில் மாறவுள்ளது.
ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட இந்த இரு வகையான பயணத் திட்டங்கள் வழி இதுவரையில் 3,000க்கும் அதிகமானோர் மலேசியா திரும்பியுள்ளதாக டாக்டர் ஆதாம் குறிப்பிட்டார்.
"கிட்டத்தட்ட 815 பேர் ஆர்ஜிஎல்லின் பயணத் திட்டத்தின் கீழ் மலேசியாவுக்குள் நுழைந்தனர். பிசிஏ திட்டம் வழி 2,647 பேர் மலேசியா வந்தனர். இதுவரை ஆர்ஜிஎல்லின் திட்டத்தின் கீழ் வந்த எவருக்கும் கிருமித்தொற்று இல்லை," என்று அவர் விவரித்தார்.
சிங்கப்பூர் - மலேசியா எல்லைகளில் மூன்றாம், நான்காம் கட்ட திறப்புகள் குறித்தும், இருநாடுகளுக்கும் இடையே ஊழியர்களின் அன்றாட பயணம் குறித்தும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் டாக்டர் அதாம் கூறினார்.
இந்நிலையில், நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள 23 நாடுகளின் பட்டியலை அந்நாட்டுக் குடிநுழைவுத் துறை நேற்று வெளியிட்டுள்ளது.
கொவிட் -19 சம்பவங்கள் அதிக அளவில் இருக்கும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பெரு, கொலம்பியா, தென்னாப்பிரிக்கா, மெக்ஸிகோ, ஸ்பெயின், அர்ஜெண்டினா, சிலி, ஈரான், பங்ளாதேஷ் ஐக்கிய அரபு சிற்றரசுகள், சவூதி அரேபியா, பாகிஸ்தான், பிரான்ஸ், துருக்கி, இத்தாலி, ஜெர்மனி, ஈராக், பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா ஆகிய நாடுகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்று உள்ளன.
எனினும், அவசர தேவைகள் உள்ளோர் அல்லது இருதரப்பு உறவுகளை உள்ளடக்கிய அதிகாரிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.
இந்நாடுகளைச் சேர்ந்த, நிரந்தரவாசத் தகுதி, நிபுணத்துவ விசா உட்பட நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போரும் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். மலேசிய குடிமக்களின் வாழ்க்கைத் துணைவர்கள், மாணவர்களுக்கும் நாடு திரும்ப அனுமதியில்லை.
நிலைமையைப் பொறுத்து அதிக ஆபத்துள்ள நாடுகள் பட்டியலில் மேலும் பல நாடுகள் இணைக்கப்படும் என்றும், அந்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்றும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் கூறினார்.

