தகவல் தொழில்நுட்பம் தொடர்பான கட்டுப்பாடுகளில் உள்ள பலவீனங்கள் சில அரசாங்க அமைப்புகளிலும் கொள்முதல், குத்தகை, செயல்முறை நிர்வாக குறைபாடுகள் ஜூரோங் நகராண்மைக் கழகத்திலும் (ஜேடிசி) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத் தலைமைக் கணகாய்வாளர் அலுவலகம் நேற்று வெளியிட்ட தனது வருடாந்திர அறிக்கையில் குறிப்பாக மூன்று அமைச்சுகள், எட்டு அரசாங்க ஆணை பெற்ற கழகங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியது.
பொதுப் பயனீட்டுக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பத்தில் தென்பட்ட பலவீனம், சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஆகியவற்றின் வர்த்தக மானியத் திட்டங்களில் தென்பட்ட நிர்வாக குறைபாடுகள் ஆகியவை அதில் அடங்கும்.
பொதுமக்களின் நம்பகத்தன்மைதான் அரசாங்க அமைப்புகளுக்கு முதல் முன்னுரிமை என்று அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்தின் அறிக்கை தொடர்பில் கருத்துரைத்த நிதி அமைச்சு கூறியது.
"குறைபாடுகள் தொடர்பில் அமைச்சுகள், அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள் தங்களுக்குரிய அறிக்கையைக் கவனமாக ஆராய்ந்து குறைபாடுகளுக்கு ஏற்ற தீர்வுகளைக் காண உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
"தேவை ஏற்பட்டால், தவறுகள் மறுபடியும் நிகழாமல் தடுப்பதற்கு, முழு அரசாங்க நிலையிலும் தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்," என்றும் நிதி அமைச்சு தெரிவித்தது.
தகவல் தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக தனிப்பட்ட ரகசியத் தரவுக் கசிவுகளோ, அனுமதிக்கப்படாத நடவடிக்கைகளோ இடம்பெறவில்லை என்று அரசாங்க அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன என்றும் நிதி அமைச்சு விவரித்தது.
கொவிட்-19 நோய்ப்பரவல் நடவடிக்கைகளால் இந்த அறிக்கை வெளியிடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டது என்று கூறிய அரசாங்கத் தலைமை கணக்காய்வாளர் கோ சூன் போ, வழக்கமாக இந்த அறிக்கை ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
கொள்முதல் மற்றும் குத்தகை நிர்வாக முறைகளில் குறைபாடுகள் அரசாங்க தொழில்நுட்ப அமைப்பு, ஜேடிசி, தேசிய நூலக வாரியம், பொதுப் பயனீட்டுக் கழகம் ஆகியவற்றின் ஆவணங்களில் கண்டுபிடிக்கப்பட்டது.
தேசிய ஆவணக் காப்பகக் கட்டடத்தின் மறுசீரமைப்புப் பணிகளின் ஒட்டுமொத்த திட்ட நிர்வாகத்தில் குத்தகைகள் மோசமாகக் கையாளப்பட்டது, தேசிய நூலக வாரியத்தின் தணிக்கையில் காணப்பட்டது.
ஜேடிசியைப் பொறுத்தவரையில், பணி நிறுத்தப்பட்ட குத்தகையாளருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக செய்யப்படாத பணிகளுக்கு ஈடுகட்டும் விதத்தில் பணத்தைக் கழித்துவிட்டு அதற்கு கொடுத்திருக்கலாம். ஆனால், பணம் முன்னதாகக் கொடுக்கப்பட்டு, பின்னர் அதை திரும்ப பெறுவதற்கு ஜேடிசி சிரமத்தை எதிர்நோக்கியது. இவ்வாண்டு ஜூன் மாதம் வரை அந்தப் பணம் திரும்ப பெறப்படவில்லை.
வெளியுறவு அமைச்சு, ஜேடிசி, பொதுப் பயனீட்டுக் கழகம் ஆகிய அமைப்புகளில் செயல்முறை நிர்வாகக் கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஆகியவற்றின் ஆறு வர்த்தக மானியத் திட்டங்களின் மானிய மதிப்பீடு மற்றும் ஒப்புதல் முறையிலும் பணப் பட்டுவாடா முறையிலும் பல்வேறு பிரச்சினைகள் இருந்தன.
உதாரணத்துக்கு, மூன்று சம்பவங்களில் தனிநபர்களும் நிறுவனங்களும் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் மானிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் மீறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
சில சமயங்களில் நிறுவனங்களுக்கு வெவ்வேறு மானியத் திட்டங்கள் மூலம் இரண்டு முறை பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்படாத மானிய பணத்தைத் திரும்ப பெறுவதிலும் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு சிரமத்தை எதிர்நோக்கிய சம்பவங்கள் பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டன.