தேசிய நூலக வாரியத்தின் கீழ் செயல்படும் தேசிய ஆவணக் காப்பகத்தின் புதுப்பிப்புப் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி செலவு $1.72 மில்லியனைத் தொட்டது என்று அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கு அதன் அதிகாரிகளின் கண்காணிப்பில் ஏற்பட்ட குறைபாடுகளே காரணம் என்று நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய ஆவணக் காப்பகத்தின் புதுப்பிப்புப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை $20.53 மில்லியன். 18 மாதப் பணிகளுக்குப் பிறகு அது கடந்த ஆண்டு எப்ரல் மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டது.
புதுப்பிப்புப் பணிகள் தொடர்பான குத்தகைகளில் பாதிக்கு மேற்பட்டவைக்கு உறுதியான ஒப்புதலுக்குப் பதிலாக, கொள்கை அளவிலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டது.
"அதாவது, குத்தகைக்கான செலவை உறுதி செய்யாமலேயே பணிகள் தொடங்குவதற்கு தேசிய நூலக வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது," என்று அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்தது.
ஒரு சந்தர்ப்பத்தில், தொகைவித்தியாசம் $370,000 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
இப்படிப்பட்ட கண்காணிப்புக் குறைபாடுகளால், புதுப்பிப்புப் பணிகளுக்கான செலவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பைவிட எட்டு விழுக்காடு கூடுதலாகி, $22 மில்லியனைக் கடந்தது.
செலவு, வரம்பைத் தாண்டி விட்டது என்று அறிந்து, ஐந்து மாதங்களுக்குப் பிறகுதான் தேசிய நூலாக வாரியம் ஒப்புதல் அளிக்கும் அமைப்பிடம் கூடுதல் நிதி கேட்டதும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது நிதிக் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பலவீனத்தைக் காட்டுகிறது என்றும் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் விளக்கியது.
அறிக்கை குறித்து நேற்று கருத்துரைத்த தேசிய நூலக வாரியம், "புதுப்பிப்புப் பணிகள் தாமதமின்றி நடைபெறுவதற்காக 2018ஆம் ஆண்டு செப்டம்பரில்தான் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கும் முறையை அறிமுகப்படுத்தினோம்." என்றது.
எல்லா உடனடி புதுப்பிப்புப் பணிகள் உட்பட இனிவரும் அனைத்துப் பணிகளுக்கும் முறையான ஆவணங்களுடன் ஒப்புதல் அளிக்கும் முறை மேற்கொள்ளப்படும் என்று வாரியம் நேற்று உறுதியளித்தது.
ஜூரோங் நகராண்மைக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்துரைத்த தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம், 26,000 நிறுவனங்களுக்கு தனது இடத்தை முறையான ஒப்புதல் இல்லாமல் வாடகைக்கு விட்டது என்றும் இது கடுமையான செயல்முறை குறைபாடு என்றும் சுட்டியது.
அந்த 26,000 நிறுவனங்கள் ஜேடிசியை தங்களின் அதிகாரபூர்வ முகவரியாகக் குறிப்பிட்டிருந்தாலும் அது ஜேடிசியின் ஒப்புதல் இல்லாமல் நடைபெற்றது. இதுவும் கவனிக்கப்படாமல் விடப்பட்டது.
அதன் நான்கு தொழிலியல் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் அங்கு சட்டத்துக்குப் புறம்பான சரக்கு சேமிப்பும், டீசல் எரிபொருள் விற்பனையும் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

