மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனத்தின் (பிசிஎஃப்) ஸ்பார்க்கல்டாட்ஸ் பாலர் பள்ளி முதல்வர்களும் ஆசிரியர்களும் அடுத்த சில ஆண்டுகளில் பாடத்திட்ட வரைவில் பயிற்சி பெறுவர். இதற்காக மசெக அறநிறுவனம், தேசிய கல்விக் கழகத்துடன் உடன்பாடு செய்துகொண்டுள்ளது.
பாடத்திட்ட வடிவமைப்பிலும் மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதிலும் ஆழ்ந்த புலமை பெற ஏதுவாக, பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் பள்ளிகளின் முதல்வர்கள், பாடத்திட்ட நிபுணர்கள் என நானூறுக்கு மேற்பட்டோர் நான்கு மாத பாலர் கல்வி பாடத்திட்ட தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்பர்.
மசெக அறநிறுவனத்தின் ஆதரவில், தேசிய கல்விக் கழகத்தால் நடத்தப்படும் இந்தப் பயிற்சித் திட்டம் 2020 பிப்ரவரி மாதம் தொடங்கி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இடம்பெறும்.
பயிற்சியாளர்களுக்கு ஆறு பாடப்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும். அத்துடன், தங்களது கல்வி நிலையப் பாடத்திட்டத்தின் ஒரு அம்சத்தில் மறுவடிவமைப்பு செய்யும் விதமாக குழுத் திட்டப்பணியையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இந்தச் சான்றிதழ் பயிற்சிக்காக மசெக அறநிறுவனம் அரை மில்லியன் வெள்ளிக்கு மேல் முதலீடு செய்து வருவதாக அதன் தலைமை நிர்வாகி விக்டர் பே குறிப்பிட்டார்.
"எந்தவொரு பாலர் பள்ளிக்கும் தரமான பாடத்திட்ட வரைவு அவசியம். உலகம் தொடர்ந்து முன்னேறி வருவதால், குழந்தைகள் மற்றும் சமுதாயத்தின் மாறி வரும் தேவைகளுக்குச் சேவையாற்றும் விதமாக பாடத்திட்டம் அவ்வப்போது மறுஆய்வு செய்யப்பட்டு, மாற்றியமைக்கப்பட வேண்டும்," என்றார் திரு பே.
பாடத்திட்ட தலைமைத்துவம் தொடர்பான கோட்பாடுகள் குறித்து விவாதிக்கவும் பரிசீலிக்கவும் இந்தச் சான்றிதழ் படிப்பு கல்வியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் என்று தேசிய கல்விக் கழகத்தின் இயக்குநர் கிறிஸ்டின் கோ கூறினார்.
குழந்தைகளின் தேவைகளை ஈடுசெய்யும் விதமாக, ஆசிரியர்களுக்கு வழிகாட்டி, ஆதரவளிக்க தம்மைப் போன்றோருக்கு இந்தப் பயிற்சித் திட்டம் உதவும் என்றார் பாசிர் ரிஸ் வெஸ்ட்டில் உள்ள ஒரு ஸ்பார்க்கல்டாட்ஸ் பாலர் பள்ளியின் முதல்வர் திருவாட்டி நொரியத்தோன் யூனோஸ்.

