சமூகப் பராமரிப்புச் சேவை வழங்குநர்களுக்கு $5 மில்லியனுக்கு மேல் நன்கொடை

2 mins read
c40fc51b-ae67-46d5-a16c-f9e4ad8f7e90
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்களை, குறிப்பாக முதியவர்களுக்குப் பராமரிப்புச் சேவை வழங்குவோருக்கு ஐந்து மில்லியன் வெள்ளிக்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாகவும் அதில் இரு மில்லியன் வெள்ளிக்கு மேல் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (ஏஐசி) தெரிவித்துள்ளது.

கொவிட்-19 நோய்ப் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் சமூகப் பராமரிப்புத் துறைக்கு அந்த நன்கொடை கைகொடுக்கும் என்று ஏஐசி கூறியது.

கிருமித்தொற்றுக் கட்டுப்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சமூகப் பராமரிப்புச் சேவை வழங்குநர்கள் மேம்படுத்தி வருவதோடு, அவற்றை அதிக பாதுகாப்புடன் வழங்க புதிய வழிகளை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் ஓர் அறிக்கை மூலமாக ஏஐசி தெரிவித்தது.

ஆயினும், அம்முயற்சிகளுக்குப் பணம் தேவைப்படுகிறது.

"ஆதரவாளர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு, எங்களது பங்காளிகளின் நீடித்த முயற்சிகளை மேம்படுத்த உதவுவதோடு மட்டுமின்றி, அவர்களின் மனஉறுதியை வலுப்படுத்துவதாகவும் உள்ளது," என்று ஏஐசி தலைமை நிர்வாகி திரு டான் குவான் சீக் சொன்னார்.

தாதிமை இல்லங்களுக்கும் அங் மோ கியோ-தை ஹுவா குவான் மருத்துவமனை போன்ற நிறுவனங்களுக்கும் இந்த நன்கொடை மூன்று வழிகளில் ஆதரவு வழங்கும்.

சேவையைத் தொடரும் வகையில் மின்னிலக்கமயமாகவும் தங்களது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் சேவையை மெச்சவும் தங்களது வளாகங்களைத் தூய்மைப்படுத்துவதற்கு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவுகளை குறைக்கவும் சமூகப் பராமரிப்பு வழங்குநர்கள் அந்த வளங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தெமாசெக் அறநிறுவனம், சிங்கப்பூர் பூல்ஸ், 'பிஸ்னஸ் சைனா' எனும் லாப நோக்கமற்ற அமைப்பு உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களும் தனிமனிதர்களும் நன்கொடை வழங்கியிருப்பதாக ஏஐசி குறிப்பிட்டது.

'பிஸ்னஸ் சைனா' அமைப்பின் தலைமை நிர்வாகியும் மெக்பர்சன் தொகுதி எம்.பி.யுமான திருவாட்டி டின் பெய் லிங் கூறுகையில், "கொரோனா நோய்ப் பரவல் சூழலில் நமது மூத்த குடிமக்கள் எளிதில் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர்களைப் பாதுகாக்க நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும்," என்றார்.

சிங்கப்பூரின் எல்லாத் தரப்பு மக்களும் கொவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பிரிவினருக்கு அதிக அபாயமிருப்பதாகவும் தெமாசெக் அறநிறுவனத்தின் திரு ரிச்சர்ட் மேக்னஸ் கூறினார்.

"கைச்சுத்திகரிப்பான்கள், சமூக மருத்துவமனைகள் மற்றும் முதியோர் பராமரிப்புச் சேவை வழங்குநர்களுக்குத் தேவையான ஆக்சிமீட்டர், உடல் வெப்பநிலை வருடிகள் போன்ற மருத்துவச் சாதனங்களுடன் தாதிமை இல்லங்களுக்கு படுக்கைகள், படுக்கைத் தொகுப்புகள் ஆகியவற்றையும் தெமாசெக் அறநிறுவனம் வழங்கியுள்ளது," என்றார் திரு மேக்னஸ்.

இதன்மூலம் பயன்பெற்ற நிலையங்களில் ஹவ்காங்கில் உள்ள 'ஆல் செயின்ட்ஸ் ஹோம்' என்ற தாதிமை இல்லமும் ஒன்று.

அவ்வில்லத்தின் சுகாதாரப் பராமரிப்பு உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவ்வளாகத்தைப் பலமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் நிபுணத்துவ தூய்மைப் பணி நிறுவனம் ஒன்று ஈடுபடுத்தப்பட்டது.

ஏஐசியிடம் இருந்து பெறப்பட்ட நிதியைக் கொண்டு அந்தத் தூய்மைப் பணிகளுக்கான செலவுகள் ஈடுகட்டப்பட்டன.

அத்துடன், உயிர்ச்சத்து, கைச்சுத்திகரிப்பான் உள்ளிட்ட பராமரிப்புத் தொகுப்புகளை வழங்கி, தனது பராமரிப்பு ஊழியர்களின் மனஉறுதியையும் அந்நிலையம் ஊக்குவித்தது.