விளம்பரப்படுத்தப்படும் பொருட்களின் விலை வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்யும் நவம்பர் முதல் நடப்புக்கு வரும் வழிகாட்டி நெறிமுறைகள்

விளம்பரப்படுத்தப்படும் பொருட்களின் விலை வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்யும் நவம்பர் முதல் நடப்புக்கு வரும் வழிகாட்டி நெறிமுறைகள்

2 mins read
e7b77ce3-a084-432a-9c80-3dede3ef3dd9
பொருட்களுக்கு விலைக் கழிவுகள் வழங்கப்பட்டால் அவற்றைப் பெறுவதற்கான காலகட்டத்தை வர்த்தகங்கள் துல்லியமாகவும் தெளிவாகவும் குறிப்பிட வேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

விளம்பரம் செய்யும் நடைமுறையில் வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தும் வர்த்தகங்கள், அத்தகைய செயல்களை நிறுத்துவதற்கு இரண்டு மாத அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

எடுத்துக்காட்டாக, $100 முன்பதிவுக் கட்டணம், $200 எரிபொருள் கட்டணம் போன்ற கூடுதல் கட்டணங்களைக் குறிப்பிடாமல் விமான டிக்கெட்டுகளை $1,000க்கு விற்பதாக அவை விளம்பரம் செய்யக்கூடாது.

விதிமுறைகளை அத்துமீறும் விலை நிர்ணய நடைமுறைகளைப் பற்றி விளக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வருகின்றன என சிங்கப்பூர் வணிகப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் நேற்று தெரிவித்தது. கடைகள், இணைய வர்த்தகங்கள் அனைத்துக்கும் இந்த வழிகாட்டி நெறிமுறைகள் பொருந்தும்.

சிங்கப்பூரில் விளம்பரப்படுத்தப்படும் பொருள், சேவைக்கான விலை வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்யும் இந்த வழிகாட்டி விதிமுறைகள் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தன. பயனீட்டாளர் பாதுகாப்பு (நியாயமான வர்த்தகம்) சட்டத்தின்கீழ் முறைகேடான நடைமுறைகளைத் தடுத்து நிறுத்த சிங்கப்பூர் வணிகப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் விதிமுறைகளை மீறாமல் இருக்க வர்த்தகங்கள் செய்ய வேண்டியவை என்னென்ன என்பது பற்றியும் இந்த வழிகாட்டி நெறிமுறைகள் பட்டியலிடுகின்றன.

முறைகேடான விலை நிர்ணய நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும் வர்த்தகங்களுக்கு அபராதம் விதிக்க தற்போது ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றாலும், அத்தகைய வர்த்தகங்கள் மீது விசாரணை நடத்தவும் அவற்றுக்கு எதிராக நீதிமன்றம் தடை ஆணை பிறப்பிக்கவும் ஆணையம் விண்ணப்பிக்கலாம்.

அத்தகைய வர்த்தகங்கள் நியாயமற்ற நடைமுறைகளைத் தொடர்ந்தால், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு அவை ஆளாகலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு $10,000 வரை அபராதமும் ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

பரிவர்த்தனைகளில் ஈடுபடும்போது, விளம்பரப்படுத்தப்பட்ட விலைக்கும் அதிகமாக கூடுதல் கட்டணங்களை விதிப்பது, போட்டியாளரைவிட குறைந்த விலையில் விற்காதபோதும் அவ்வாறு செய்வதாக விளம்பரம் செய்வது, பொய்யான விலைக் கழிவு, "இலவசம்" என விளம்பரங்களில் குறிப்பிடுவது ஆகிய நான்கு அம்சங்களில் இந்த வழிகாட்டி நெறிமுறைகள் கவனம் செலுத்துகின்றன.

விளம்பரப்படுத்தப்படும் விலையில் வரி, சேவை போன்ற கட்டாயக் கட்டணங்களைத் தெளிவாகக் குறிப்பிடுவது அவசியம். விலைக் கழிவுகள் வழங்கப்பட்டால் அவற்றைப் பெறுவதற்கான காலகட்டத்தை வர்த்தகங்கள் துல்லியமாகவும் தெளிவாகவும் குறிப்பிட வேண்டும். இலவசமாகப் பெறும் பொருள் அல்லது சேவைக்கான நிபந்தனைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

பொதுமக்களுடன் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக்குப் பிறகு சிங்கப்பூர் வணிகப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் இந்த முழு வழிகாட்டி நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நியாயமற்ற நடைமுறைகளை எதிர்நோக்குவோர் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்திடம் புகார் அளிக்க வேண்டும் என்று வணிகப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் கூறியது.

வர்த்தகங்களின் நடத்தையைத் தான் தொடர்ந்து கண்காணிக்க இருப்பதாகவும் முறைகேடான வர்த்தக நடைமுறைகளைக் கடைப்பிடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.