மாணவர்கள், பட்டதாரிகள், பணியிடைக்கால ஊழியர்கள் ஆகிய தரப்பினருக்கு ஆழ்ந்த தொழில்நுட்பத் திறன் தேவைப்படும் துறையில் கூடுதல் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படவுள்ளன. 'எஸ்ஜிஇன்னொவேட்' அமைப்பு இதுகுறித்த விவரங்களை நேற்று அறிவித்தது.
இம்மாதம் 12ஆம் தேதி எஸ்ஜிஇன்னொவேட் ஏற்பாடு செய்யும் மெய்நிகர் வேலைவாய்ப்புக் கண்காட்சியில், புதிதாக தொழில் தொடங்கிய 30க்கும் மேலான நிறுவனங்களில் 200க்கும் அதிகமான வேலைப் பயிற்சி மற்றும் முழுநேர வேலைகள் வழங்கப்படவுள்ளன.
மென்பொருள் தயாரிப்பு, இயந்திரவியல் பொறியியல், விற்பனை மற்றும் வர்த்தக மேம்பாடு போன்ற துறைகளில் தொழில்நுட்ப ரீதியிலான வேலைகள் வழங்கப்படவுள்ளன.
வேலைவாய்ப்புக் கண்காட்சியில் பங்கேற்போர் செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்புத் துறைகளில் இலவச பயிற்சி பயிலரங்குகள், குழுக் கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கலாம்.
"சமூகத்திற்கு ஆதரவளிக்க, ஆழ்ந்த தொழில்நுட்பத் திறன் தேவைப்படும் துறையில் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். இதன் தொடர்பில் புதிய திட்டங்களை ஆராய பங்காளித்துவ நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
"தொழில்நுட்ப மேம்பாட்டிற்குப் பங்களிக்கும் தனித்திறன்மிக்க வேலைகளுக்கான தேவை வலுவாக இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். எதிர்கால வர்த்தக வளர்ச்சிக்கு இவை துணைபுரிகின்றன. இத்துறையில் குறைந்தது 1,000 வேலைகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று எஸ்ஜிஇன்னொவேட் அமைப்பின் தலைமை நிர்வாகி லிம் ஜுய் கூறினார்.
இந்த மெய்நிகர் வேலைவாய்ப்புக் கண்காட்சி ஒருபுறமிருக்க, 'பவர் எக்ஸ்' என்று அழைக்கப்படும் ஆழ்ந்த தொழில்நுட்பத் திறன் தேவைப்படும் முழுநேர வேலைப் பயிற்சித் திட்டம் ஒன்றை எஸ்ஜிஇன்னொவேட் அமைப்பு தொடங்கியுள்ளது.
இத்திட்டத்திற்கு சிங்கப்பூர் தேசிய ஆய்வு அறநிறுவனம் ஆதரவளிக்கிறது. தொழில்நுட்பத் திறன் தேவைப்படும் துறையில் புதிய வாழ்க்கைத் தொழிலை அமைப்பதற்கு உள்ளூர் திறனாளர்களுக்கு அத்தியாவசிய திறன்களை வளர்க்க இந்தத் திட்டம் நோக்கம் கொண்டுள்ளது.
இதில், 'பவர் எக்ஸ் ரோபாட்டிக்ஸ்' எனப்படும் திட்டம், எதிர்கால இயந்திரவியல் பொறியாளர்களை உருவாக்க உதவும்.
இதில் பங்கேற்பவர்கள் 'ஹோப் டெக்னிக்', 'மொவெல் ஏஐ', 'என்டிஆர் மெடிக்கல் டெக்னாலஜி', 'போலிபீ', 'சிஸ்டோ ரொபாட்டிக்ஸ்' போன்ற பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் நிபுணர்களின்கீழ் பயிற்சி பெறும் வாய்ப்பைப் பெறுவர். இந்தத் திட்டத்தின்கீழ் இரு கட்டங்களாக பிரிக்கப்படும் பயிற்சி வகுப்புகள் ஒன்பது மாதங்களுக்கு நடத்தப்படும். முதல் கட்டத்தில் பங்கேற்பாளர்கள் முறையான பயிற்சியைப் பெறுவர். இரண்டாம் கட்டத்தில் அவர்கள் நிறுவனங்களில் வேலை செய்துகொண்டே பயிற்சி செய்வர்.
முதலாளிகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தால் அவர்கள் முழுநேர வேலையில் சேர முடியும்.
"தொழில்நுட்பத் திறன் கொண்ட இயந்திரவியல் பொறியாளர்களுக்கான தேவை உள்ளது. இதன் தொடர்பில் முறையான பயிற்சி பெற்றவர்கள் எங்களது குழுவில் சேர்வதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது," என்று 'மொவெல்' தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அபிஷேக் குப்தா கூறினார்.
பயிற்சி பெறுவதற்கான கட்டணத்தை ஊழியர்கள் செலுத்த தேவையில்லை. அதுபோக, பயிற்சிக்கால உதவித் தொகையாக மாதத்திற்கு $4,000 வரை அவர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையப் பாதுகாப்பு போன்ற ஆழ்ந்த தொழில்நுட்பத் திறன் தேவைப்படும் மற்ற துறைகளுக்கும் எதிர்காலத்தில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படலாம் என்று எஸ்ஜிஇன்னொவேட் அமைப்பு கூறியது.

