வேலை தேடுபவர்கள், முந்தைய வேலை அனுபவத்தை மட்டும் பார்ப்பதற்குப் பதிலாக திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தினால் ஒரு துறையிலிருந்து வேறொரு துறைக்கு மாற முடியும் என்று EY எனும் நிபுணத்துவச் சேவை வழங்கும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.
கொவிட்-19 நோய்ப் பரவலால் உணவு சேவை, பொழுதுபோக்கு சேவை, விமானப் போக்குவரத்து, கட்டுமானம், ஹோட்டல் போன்ற துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதை அந்நிறுவனம் சுட்டியது.
அதேவேளையில், மின்னணுவியல், நிதிச் சேவை, உயிர் மருத்துவம், உணவு உற்பத்தி, சுகாதாரப் பராமரிப்பு, தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், தளவாடவியல், ஊடகம், சமூச சேவை முதலிய துறைகளில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அது குறிப்பிட்டது. வேலை தேடுவோரில் 25 விழுக்காட்டினர், வேறொரு தொழில்துறைக்கு மாற விரும்புவதாக கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. எனினும், வளர்ச்சி வாய்ப்புகள் உடைய தொழில்துறைகளில் ஊழியர்களைப் பணியமர்த்துவது சவால்மிக்க ஒன்றாக இருப்பதாக EY ஆசியான் ஊழியரணி ஆலோசனைக் குழுத் தலைவர் சமிர் பேடி குறிப்பிட்டார்.
"திறன் அடிப்படையிலான அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். முந்தைய வேலையில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக வேறொரு துறையில் புதிய வேலைக்கு மாற உங்களிடம் உள்ள திறன்கள் எவ்வாறு உதவும் என்பது பற்றி எடுத்துரையுங்கள். அப்படிச் செய்தால், வேலை மாறுவதற்கு சற்று எளிதாக இருக்கும்," என்று அவர் அறிவுறுத்தினார்.
எடுத்துக்காட்டாக, உணவைக் கையாளுவதிலும் தரக் கட்டுப்பாட்டில் ஊழியர்களுக்கு மூலாதாரத் திறன்கள் இருக்கும் பட்சத்தில், ஹோட்டல் அல்லது உணவு சேவை துறையிலிருந்து உணவு உற்பத்தித் துறைக்கு அவர்கள் மாறலாம்.
"ஊழியர்களின் திறன் மேம்பாட்டில் வர்த்தகங்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்," என்றார் திரு பேடி.

