சிங்கப்பூர் 2023ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து செயற்கைக்கோள் அடிப்படையிலான மின்னியல் சாலைக் கட்டண முறைக்கு (இஆர்பி) மாறவிருக்கிறது. அதே நேரத்தில், வாகனமோட்டிகள் பயணம் செய்யும் தூரத்தின் அடிப்படையில் மின்னியல் சாலைக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இப்போது பயன்பாட்டில் உள்ள 'இன்-வெகிக்கிள் (IU)' கருவிக்குப் பதிலாக வாகனங்களிலேயே புதிய மின்னணுக் கருவிகளை (ஆன்போர்ட் யூனிட்) பொருத்தும் பணி அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.
புதிய கருவியை முதல்முறை பொருத்துவதற்குக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
முன்னதாக இவ்வாண்டு இறுதியில் அப்புதிய கருவியைப் பொருத்தும் பணி தொடங்கும் என ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், கொவிட்-19 நெருக்கடி உலகளாவிய விநியோகத் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால், அந்தத் திட்டம் 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டு, 18 மாதங்களுக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து புதிய இஆர்பி முறை நடப்பிற்கு வரும். ஆயினும், இப்போதைய கட்டண வசூலிப்பு முறையே தொடரும் என்றும் இஆர்பி கட்டணம் வசூலிக்கப்படும் இடங்கள் சிறிய, மெல்லிய நுழைவாயில்கள் மூலம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் ஆணையம் தெரிவித்தது.
இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது, தூர அடிப்படையில் இஆர்பி கட்டணம் வசூலிப்பதற்கான தொழில் நுட்பம் வர இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறி இருந்தார்.
இஆர்பி கட்டணம் வசூலிக்கப்படும் இடங்கள், கட்டண விகிதங்கள் போன்ற தகவல்களுடன் நிகழ்நேர சாலைப் போக்குவரத்து நிலவரம், பள்ளிகள், முதியவர்கள் அதிகம் சாலையைக் கடக்கும் இடங்கள் போன்ற தகவல்களையும் வாகனங்களில் பொருத்தப்படும் புதிய கருவிகள் வழங்கும்.
அந்த மின்னணுக் கருவிகள் இரு வடிவமைப்புகளில் வரவுள்ளன. மோட்டார்சைக்கிள்களுக்கு ஒரே சாதனமாகவும் மற்ற வாகனங்களுக்கு ஒரு ஆன்டெெனா, ஒரு தொடுதிரை, ஒரு செயலாக்கச் சாதனம் என மூன்று பகுதிகளைக் கொண்ட தொகுப்பாகவும் அவை வடிவமைக்கப்பட உள்ளன.
அந்தப் புதிய கருவிகள் இப்போதைய இஆர்பி முறைகளுக்கும் கார் நிறுத்தப் பூங்காங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும். நெட்ஸ் ஃபிளாஷ்பே மற்றும் ஈஸிலிங்க் அட்டைகள், அல்லது கடன் அல்லது பற்று அட்டைகள் மூலமாக வாகனமோட்டிகள் இஆர்பி கட்டணத்தைச் செலுத்த முடியும்.
வாகனமோட்டிகளின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் என ஆணையம் கூறியது.
"போக்குவரத்து நெரிசல் நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத் திட்டமிடல் நோக்கங்களுக்காக பெயர் குறிப்பிடப்படாத அல்லது தொகுக்கப்பட்ட தரவுகளை மட்டும் நிலப் போக்குவரத்து ஆணையம் பயன்படுத்தும்," என்று ஆணையம் தெரிவித்தது.
அத்துடன், கட்டணம் செலுத்துதல், கட்டணங்கள் மற்றும் இஆர்பி கட்டணம் செலுத்தாதது போன்ற அமலாக்க நடவடிக்கைகளுக்கு வாகனம் சார்ந்த தரவுகள் பயன்படுத்தப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

