சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் சாங்கி விமான நிலையக் குழுமத்தின் தலைவர் திரு லியூ மன் லியோங் அதிகம் பங்காற்றி இருப்பதாக தெமாசெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரு லியூ சர்பானா ஜூரோங்கின் தலைவராகவும் தெமாசெக் நிறுவனத்தின் மூத்த அனைத்துலக வர்த்தக ஆலோசகராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமது வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய திருவாட்டி பார்த்தி லியானி தம்மிடமிருந்தும் தமது குடும்பத்தாரிடமிருந்தும் $34,000 பெறுமானமுள்ள பொருட்களைத் திருடியதாக போலிசில் புகார் செய்திருந்தார்.
இதையடுத்து, திருவாட்டி பார்த்திக்கு இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் திருவாட்டி பார்த்தி மேல்முறையீடு செய்ததை அடுத்து அவரை உயர் நீதிமன்றம் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளது.
இந்நிலையில், பணிப்பெண் திருவாட்டி பார்த்திக்கு எதிராக எந்த நோக்கத்துடன் திரு லியூவும் அவரது குடும்பத்தாரும் புகார் செய்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
"சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பொதுத் துறையிலும் தனியார் துறையிலும் பலர் பங்காற்றியுள்ளனர். அவர்களில் திரு லியூவும் ஒருவர். சாங்கி விமான நிலையக் குழுமம், சர்பானா ஜூரோங், கெப்பிடாலேண்ட் ஆகிய நிறுவனங்களில் அவரது செயல்பாடு அதற்குச் சான்று," என்று தெமாசெக் இண்டர்நேஷனலின் தலைமை நிர்வாகி தில்ஹன் பிள்ளை சந்திரசேகரா நேற்று தெரிவித்தார்.
தெமாசெக்கின் செயல்பாடு குறித்து நடத்தப்பட்ட மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தின்போது திரு லியூவின் செயல்கள் தெமாசெக்கின் நெறிமுறைக்கு எதிரானவையா என்றும் இந்த விவகாரம் குறித்து தெமாசெக் நடவடிக்கை எடுக்குமா என்பது குறித்தும் திரு பிள்ளையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெறுவதால் அதுகுறித்து கருத்து தெரிவிக்கப்போவதில்லை என்று திரு பிள்ளை தெரிவித்தார்.
இருப்பினும், திரு லியூ தரப்பின் நியாயத்தையும் கேட்க வேண்டும் என்று அவர் கூறினார். அதற்கு முன்பு விவகாரம் குறித்து முடிவுஎடுப்பது சரியல்ல என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
திரு லியூவுடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தொடர்புகொண்டபோது உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

