சிங்கப்பூரின் முதல் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளன. துவாஸ் நெக்சஸ் என்னும் பெயரில் உருவாகும் நீர், திடக்கழிவு சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் பணிகள் 2025ஆம் ஆண்டில் கட்டம் கட்டமாக முடிவுறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயனீட்டுக் கழகமும் தேசிய சுற்றுப்புற வாரியமும் நேற்று கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இரு கழிவு சுத்திகரிப்புகளையும் ஒருங்கிணைக்கும் ஆைல சிங்கப்பூரின் எரிசக்தியையும் வளங்களையும் அதிகமான அளவில் மீட்க உதவும். அத்துடன் நிலத்தை மேம்பட்ட முறையில் பயன்படுத்தவும் அது கைகொடுக்கும்.
இரு பெரும் சுத்திகரிப்பு நிலையங்களும் பொதுப் பயனீட்டுக் கழகத்தாலும் தேசிய சுற்றுப்புற வாரியத்தாலும் தனித்தனியே நிர்வகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுப் பயனீட்டுக் கழகத்தின் துவாஸ் நீர் மீட்பு ஆலை, தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ஒருங்கிணைந்த கழிவு சுத்தி
கரிப்பு நிலைம் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த ஒருங்கிணைந்த ஆலை. இரு வெவ்வேறு கழிவு சுத்திகரிப்புகளும் தனித்தனி கட்டடங்களாக அமைக்கப்படாமல் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் நான்கு காற்பந்துத் திடல்களுக்குச் சமமான, சுமார் 2.6 ஹெக்டர் நிலப்பரப்பு மிச்சமாகும் என அறிக்கை கூறியது.
நீரையும் கழிவையும் சுத்திகரிக்க நிலத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டு இருக்கும் உலகின் முதல் ஒருங்கிணைந்த சுத்தி கரிப்பு ஆலையாக துவாஸ் நெக்சஸ் கருதப்படுகிறது.
இரு சுத்திகரிப்பு ஆலைகளின் மூலம் எரிசக்தி தன்னிறைவு கிடைக்கும். இந்த தன்னிறைவின் மூலம் ஆண்டுதோறும் 200,000 டன்னுக்கும் மேற்பட்ட கரியமில வாயு வெளியேற்றத்தைத் தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 42,500 கார்களை சாலைகளில் இருந்து அப்புறப்படுத்துவதற்குச் சமம்.
துவாஸ் நீர் மீட்புத் திட்டம் என்பது இரண்டாவது கட்ட பாதாள கழிவுநீர் சுத்திகரிப்பு முறையின் ஒரு முக்கிய அம்சம். தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 800,000 கன மீட்டர் நீரை இது சுத்திகரிக்கும். இது 320 ஒலிம்பிக் நீச்சல்குளங்களை நிரப்பும் அளவுகொண்டது. தொழிற்சாலையிலும் வீடுகளிலும் பயன்படுத்தப்பட்ட நீரை தனித்தனி சுரங்கக் குழாய்கள் மூலம் ஆலை பெறும். தொழிற்சாலைகளிலிருந்து பெறப்பட்ட நீர் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் தொழிற்சாலைகளுக்கே அனுப்பப்படும்.
அதேபோல தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ஒருங்கிணைந்த கழிவு சுத்திகரிப்பு ஆலை என்பது சிங்கப்பூரின் ஆகப்பெரிய கழிவு எரியூட்டு ஆலையாக உருவெடுக்கும். அதேநேரம் எரிசக்தி ஆற்றல் கொண்டதாகவும் அமையும். வீடுகளின் மறுசுழற்சிப் பொருட்களையும் வேண்டாமென்று ஒதுக்கப்பட்ட உணவையும் தனித்தனியே பிரித்து சுத்திகரிக்கும் திறனை ஆலை கொண்டிருக்கும்.

