கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போருக்காக தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வழங்கியுள்ள நன்கொடைகளில் 11 மில்லியன் முகக்கவசங்களும் ஒரு மில்லியன் முகக்கேடயங்களும் அடங்கும். கிருமித் தடுப்பு தொடர்பில் சிங்கப்பூர்வாசிகளுக்காக தனது பங்கை ஆற்றும் வகையில் நிறுவனம் இலவச கைச் சுத்திகரிப்பான்களையும் வழங்கியுள்ளது.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் உணவு, பானத் துறையின் முன்களப் பணியாளர்களுக்கும் நிறுவனம் சுமார் ஒரு மில்லியன் முகக்கேடயங்களை அளித்திருந்தது. அத்துடன் ரத்தத்தில் பிராணவாயுவின் நிலையை அளவிடும் 250,000 'ஒக்ஸிமீட்டர்' கருவிகளையும் சமூகத்தின் வெவ்வேறு குழுக்களுக்கு நிறுவனம் நன்கொடை அளித்துள்ளது.
தெமாசெக் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு திலன் பிள்ளை, நிறுவனத்தின் ஆண்டிறுதி மறுஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் நேற்று பேசினார். உள்ளூர் சமூகங்களை வலுப்படுத்துவதும் கொவிட்-19 நெருக்கடியில் ஒருமித்த மீள்திறனை வளர்ப்பதும் நன்கொடைகள் தரப்பட்டதன் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
நிறுவனத்தின் சமூக, நன்கொடை பிரிவான தெமாசெக் அறநிறுவனம், கொவிட்-19க்கு எதிரான போருக்காக $800 மில்லியன் நன்கொடையை உறுதியளித்துள்ளது.
கொவிட்-19 தொடர்பில் ஜூலை வரை கிட்டத்தட்ட $400 மில்லியன் செலவாகியுள்ளதாகவும் இதில் தடுப்பூசி ஆராய்ச்சிக்காக $250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

