சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான தெமாசெக் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கான ஓராண்டு ஈவு கடந்த நிதியாண்டில் எதிர்மறை விகிதத்திற்குச் சென்றுவிட்டது. அத்துடன், அந்நிறுவனத்தின் நிகர பங்கு மதிப்பும் சரிந்துவிட்டது.
2020 மார்ச் 21ஆம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் தெமாசெக்கின் நிகர மதிப்பு $306 பில்லியனாக வீழ்ச்சி கண்டது என்று நேற்று வெளியிடப்பட்ட அதன் வருடாந்திர மறுஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
முந்தைய 2018-19 நிதியாண்டின் முடிவில் அம்மதிப்பு $313 பில்லியன் எனச் சாதனை அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.
கடந்த நிதியாண்டின் இறுதிக் காலாண்டில் அனைத்துலக நிதிச் சந்தைகளில் கொவிட்-19 நோய்ப் பரவல் ஏற்படுத்திய தாக்கம் தெமாசெக் நிறுவனத்தின் இறுதி பங்குச் செயல்பாடு முடிவுகளிலும் வெளிப்பட்டது.
2018-19 நிதியாண்டில் 1.49 விழுக்காடாக இருந்த பங்குதாரர்களுக்கான ஓராண்டு ஈவு, 2019-20 நிதியாண்டில் -2.28 விழுக்காடாக இறங்கிவிட்டது. அத்துடன், பத்து ஆண்டுகளுக்கான மொத்த பங்குதாரர் ஈவு விகிதமும் 9 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாகச் சரிந்துவிட்டது.
கடைசியாக 2016ஆம் ஆண்டில் பங்குதாரர்களுக்கான ஓர் ஆண்டு ஈவு எதிர்மறை விகிதத்தில் இருந்தது. அவ்வாண்டில் ஈவு விகிதம் -9.02 விழுக்காடாக வீழ்ச்சியடைந்தது.
இந்நிலையில், 2009ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளியல் நெருக்கடி நிலவியபோது பங்குதாரர்களுக்கான ஓராண்டு ஈவு -29.6 விழுக்காடாகவும் 2003ஆம் ஆண்டில் சார்ஸ் பரவியபோது -18.8 விழுக்காடாகவும் சரிந்ததாக தெமாசெக் நிறுவனம் ஊடகங்களிடம் நேற்று தெரிவித்தது.
கடந்த நிதியாண்டில், பட்டியல் இடப்படாத சொத்துகள் தெமாசெக்கின் நிகர பங்கு மதிப்பில் 48 விழுக்காடாக இருப்பதை அதன் வருடாந்திர மறுஆய்வு அறிக்கை காட்டுகிறது. நிதிச் சேவைகளின் பங்கு 23 விழுக்காடாக உள்ளது.
கட்டணம் செலுத்தும் சேவைகளை வழங்கும் பேபால், மாஸ்டர்கார்ட், விசா, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மின்னிலக்கக் கடன் தளமான 'பிளண்ட்' ஆகிய நிறுவனங்களில் தெமாசெக் முதலீடுகளை அதிகப்படுத்தியுள்ளது.
கொரோனா நோய்ப் பரவல் ஏற்படுத்தும் தாக்கத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக தெமாசெக் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திலன் பிள்ளை தெரிவித்தார்.
ஆசியாவில் தனது நிலையை தெமாசெக் நிறுவனம் வலுப்படுத்தி வருகிறது. அதன் 66% சொத்துகள் இவ்வட்டாரத்திலேயே உள்ளன. சீனாவிலும் சிங்கப்பூரிலும் அதிக முதலீடு செய்துள்ள நிலையில், அடுத்ததாக வடஅமெரிக்காவிலும் அந்நிறுவனம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
சென்ற நிதியாண்டில் தெமாசெக் நிறுவனம் $32 பில்லியனை முதலீடு செய்தது. அதே காலகட்டத்தில், 26 பில்லியன் வெள்ளி முதலீடுகளைத் திரும்பப் பெற்றது.
இந்நிலையில், கணிக்கவியலாத கொவிட்-19 பரவலும் புவிசார் அரசியல் பிரச்சினைகளும் இப்போதைய சவால்களாக விளங்குகின்றன என்று தெமாசெக் துணைத் தலைமை நிதி அதிகாரி பிங் சின் யீ கூறியிருக்கிறார்.

