மேல்முறையீட்டு வழக்குகளைக் கையாள புதிய குழுவை நியமித்தது செங்காங் நகர மன்றம்

மேல்முறையீட்டு வழக்குகளைக் கையாள புதிய குழுவை நியமித்தது செங்காங் நகர மன்றம்

2 mins read
18968d49-2844-4ca1-892c-87cce58753cd
பொதுப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நிலுவையிலுள்ள மேல்முறையீடுகள் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கையாள சுதந்திரமாகச் செயல்படக் கூடிய குழு ஒன்றை செங்காங் நகர மன்றம் நியமித்துள்ளது.

பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியில் இடம்பெற்று, இப்போது செங்காங் குழுத்தொகுதிக்குள் வரும் பகுதிகள் தொடர்பான சொத்துகளும் பொறுப்புகளும் பாட்டாளிக் கட்சியால் நிர்வகிக்கப்படும் புதிய செங்காங் நகர மன்றத்திற்கு மாற்றப்படவுள்ள நிலையில் இந்தப் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

"அந்த மேல்முறையீடுகள் நிர்வாகம் தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் சட்டத்திற்குட்பட்டும் இடம்பெறும் என்பதை உறுதிசெய்ய முழு கடப்பாடு கொண்டுள்ளதாக செங்காங் நகர மன்றம் முன்னதாக அறிவித்திருந்தது. அந்த வகையில், தன்னிச்சையான குழு நியமனம் இடம்பெறுகிறது," என்று ஓர் அறிக்கை வாயிலாக செங்காங் நகர மன்றம் நேற்று தெரிவித்தது.

கடந்த 2013 முதல் 2015 வரை முந்தைய பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதி பாட்டாளிக் கட்சியின்கீழ் இருந்தபோது ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்புகளை மீட்பதற்காக பாசிர் ரிஸ் - பொங்கோல் நகர மன்றம் முன்னதாக ஒரு வழக்கைத் தொடுத்திருந்தது.

அந்த முந்தைய தனித்தொகுதி இப்போது செங்காங் குழுத்தொகுதிக்குள் வருகிறது. அத்துடன், அண்மைய பொதுத் தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்காங் குழுத்தொகுதியில் வெற்றி பெற்ற பாட்டாளிக் கட்சியிடமே அது மீண்டும் வந்து சேர்ந்தது.

இதையடுத்து, பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றம் தொடுத்துள்ள வழக்கையும் செங்காங் நகர மன்றமே எதிர்கொள்ள வேண்டும்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தன்னிச்சையான குழு வழக்குச் செலவாக எதையும் பெறுவதில்லை என ஒப்புக்கொண்டுள்ளது என்றும் எல்லா நேரங்களிலும் செங்காங் நகர மன்றத்தின் நலன்களைக் கருத்தில்கொண்டு சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் செயல்படும் என்றும் அந்நகர மன்றம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 5ஆம் தேதி அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்ட அக்குழுவில் வழக்கறிஞர்கள் இருவரும் சட்டப் பேராசிரியர் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.