சுமார் $640,000 மதிப்பிலான போதைப்பொருள்கள் நேற்று (செப்டம்பர் 8) சிக்கியதாகவும் அதன் தொடர்பில் இரண்டு சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
கைதானவர்களில் ஒருவர் 30 வயது ஆடவர், மற்றவர் 28 வயது பெண்.
பூன் லே டிரைவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தில் நேற்று பிற்பகலில் அந்த ஆடவரைக் கைது செய்த அதிகாரிகள், அவரது வீட்டுக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அந்தப் பெண்ணையும் கைது செய்தனர்.
அப்போது 24 பொட்டலங்களில் 1,203 கிராம் மெதாம்ஃபீட்டமைன், 10 கிராம் கஞ்சா, 512 கிராம் கீட்டமைன். 669 எக்ஸ்டசி மாத்திரைகள், 7,502 எரிமிந்5 மாத்திரைகள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
பொட்டலங்கள் போடுவதற்கான பொருள்கள், $8,680 ரொக்கமும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ஆடவரின் காரை சோதனையிட்டதில் 1,500 கிராம் ஹெராயின் கிடைத்தது.
சம்பவத்தின் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.

