சிங்கப்பூரில் சமூக தொற்று விகிதங்கள் பொதுவாக குறைவாகவும் நிலையானதாகவும் இருப்பதால், முதியோரின் மனரீதியான, சமூக ரீதியான நலனைப் பேண அவர்களுக்கான நடவடிக்கைகள் மீண்டும் நேற்று தொடங்கப்பட்டன.
இருப்பினும், முதியோர் விழிப்புடன் இருக்க வேண்டும். கை சுகாதாரம், பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மூத்த குடிமக்கள் வெளியே செல்லும்போது சிறிய குழுவோடு செல்ல வேண்டும் என்று நேற்று நடந்த கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தது.
மக்கள் கழகம், சுகாதார மேம்பாட்டு வாரியம், 'ஸ்போர்ட்ஸ்' சிங்கப்பூர் 'த்ர்ட் ஏஜ்' மன்றம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்படும் முதியோருக்கான ஐந்து பேர் வரை சிறிய குழு நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கலாம்.
இந்த நடவடிக்கைகள் தாதிமை இல்லம், முதியோர் பராமரிப்பு மையங்கள் போன்ற மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு வசதிகளிலும் தொடங்க அனுமதிக்கப்படும் என்று பணிக்குழு அறிவித்தது.
வகுப்பறை நடவடிக்கைகள், குழு உடற்பயிற்சி வகுப்புகள் போன்றவை இந்த குழு நடவடிக்கைகளின் சில எடுத்துக்காட்டுகள்.
எனினும், அதிக ஆபத்துள்ள செயலாக கருதப்படுவதால் பாட்டு வகுப்புகள் அனுமதிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கான் கிம் இயோங் கூறினார்.
முன்னதாக, தொடர்பைக் குறைக்கும் நோக்கில் தனியாக ஒருவர் ஈடுபடக்கூடிய நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
முதியோரின் மனநலன், சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதில் குழு நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த பங்களிப்பை வழங்குகின்றன. இந்த திட்டங்களிலிருந்து அதிகமான முதியோர் பயனடைய அனுமதிக்கப்படும் வகையில் நேற்று முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன என்றார் அவர்.
அதேநேரத்தில், பாதுகாப்பான இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்பதை பணிக்குழு குறிப்பிட்டது.
"மூத்த குடிமக்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால் அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தோம். நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிப்போம். காலப்போக்கில் நிலைமைக்கேற்ப அதிக நடவடிக்கைகளை வழங்கலாம்," என்றார் சுகாதார அமைச்சின் மருத்துவ சேவை களின் இயக்குநர் கென்னத் மாக்.
மேலும், மூத்த தலைமுறைத் தூதர்கள், முதியோர் செயல்பாட்டு மையங்கள், சமூக வளம், ஈடுபாடு மற்றும் ஆதரவுக் குழுக்கள், நீரிழிவு நோய்கள் தொடர்பான நடவடிக்கைகள் போன்றவையும் நேற்று முதல் செயல்படத் தொடங்கின என்று பணிக்குழு அறிவித்தது.
முதியோர் தங்கள் நிலைமை மோசமாவதைத் தவிர்க்க, மருத்துவ சோதனைகளுக்குத் தவறாமல் செல்லுமாறு பணிக்குழு கேட்டுக்கொண்டது.

