அரசாங்க ஏலக்குத்தகையை வழங்குவதில் உள்ளூரில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்றும் கொள்ளைநோய் பாதிப்பிலிருந்து வலுவுடன் அந்நிறுவனங்கள் மீண்டெழ இந்நடவடிக்கை உதவும் என்றும் வர்த்தக தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் (படம்) தெரிவித்துள்ளார்.
புதிதாக தொழில் தொடங்குவோருக்கும் சிறிய, நடுத்தர நிறுவனங்களை நடத்துவோருக்கும் உதவும் வகையில் அரசாங்கக் கொள்கைகள் சிறந்த முறையில் கடைப்பிடிக்கப்படுவது அவசியம் என்று நேற்று அவர் 'மணி எஃப்எம் 89.3' (Money FM 89.3) வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
"இந்தக் கொள்கைதான் என்றில்லாமல் அரசாங்கக் கொள்கை களில் இங்கு இன்னும் வளர வேண்டிய தொழில்முனைவோரை நாடுவதற்குரியவற்றை அறிந்து சிறப்பான முறையில் கடைப்பிடிக்க லாம் என்பது என் கருத்து.
"நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளர்ச்சி கண்ட பின்னர் பெரிய நிறுவனங்களைப் போலவே இவற்றுக்கும் அரசாங்க அமைப்புகளின் அரவணைப்பு தேவைப்படும்.
"அந்த வகையில் அரசாங்கக் கொள்முதல் கொள்கைகள் மூலம் இந்நிறுவனங்களைக் கைதூக்கிவிடலாம். சிங்கப்பூரில் உள்ள பெரிய அளவிலான அரசாங்கத் தொடர்பு நிறுவனங்கள் நற்சான்று அளிப்பதன் மூலம் இத்தகைய நிறுவனங்கள் அனைத்துலக அளவில் போட்டியிடும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள முடியும்," என்றார் பிரதமர் அலுவலக அமைச்சரும் மனிதவள இரண்டாம் அமைச் சருமான திரு டான்.
அத்துடன், வர்த்தகங்களும் ஊழியர்களும் தங்களைத் தாங்களே புதுப்பித்து மீண்டெழுவதற்கு உதவும் குறுகிய, நடுத்தர, நீண்டகால நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டார்.
ஊதிய மானியம் வழங்கக்
கூடிய வேலை ஆதரவுத் திட்டம், சுய தொழில் புரிவோர் வருவாய் நிவாரணத் திட்டம் போன்றவை இங்குள்ள பெரும்பாலான நிறுவனங்களையும் வேலைகளையும் காப்பாற்ற உதவி இருப்பதாகக் குறிப்பிட்ட திரு டான் இவை குறுகிய கால உதவி நடவடிக்கைகள் என்றார்.
வேலை வளர்ச்சி ஊக்குவிப்புத் திட்டம் போன்றவை நடுத்தர கால அளவிற்கு உதவக்கூடியவை என்று தெரிவித்த அவர், ஆட்குறைப்பு, வர்த்தகங்கள் மூடல் போன்றவை தொடர்பான அச்சங்களைத் தணிக்கக்கூடியனவாக அவை இருக்கும் என்றார்.
சிங்கப்பூரர்களுக்கு வேலை தரும் நிறுவனங்களை ஆதரிக்க வேலை வளர்ச்சி ஊக்குவிப்புத் திட்டத்தை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்.

