இந்தோனீசிய பணிப்பெண் பார்த்தி லியானிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீது சட்டபூர்வ முடிவுகளை எடுப்பதில் தலைமைச் சட்ட அதிகாரி லூசியன் வோங்கோ துணைத் தலைமைச் சட்ட அதிகாரிகளோ தலையிடவில்லை என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் நேற்று தெரிவித்தது.
சாங்கி விமான நிலையக் குழுமத் தலைவர் லியூ மன் லியோங் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தபோது அவர் மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றச்சாட்டில் இருந்து பார்த்தி லியானி (படம்) விடுவிக்கப்பட்டார். அதன் தொடர்பில் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் வழக்கமாகக் கையாளும் வழங்குகளில் இதுவும் ஒன்று. அதேநேரம், தலைமைச் சட்ட அதிகாரி அல்லது துணை தலைமைச் சட்ட அதிகாரியின் தலையீடு இதற்குத் தேவைப்படாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் இவ்வழக்கு தொடர்பான மறுஆய்வு துணை தலைமைச் சட்ட அதிகாரி ஹரி குமார் நாயர் தலைமையில் நடைபெற்று வருவதாகவும் அறிக்கை தெரிவித்தது.
உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானதும் வழக்கின் மறுஆய்வுப் பணியிலிருந்து தலைமைச் சட்ட அதிகாரி லூசியன் வோங் செப்டம்பர் 5ஆம் தேதியே தாமாக முன்வந்து விலகிவிட்டதாகவும் அறிக்கை கூறியது. இருப்பினும் அதற்கான காரணங்களை அது விவரிக்கவில்லை.

