சிங்கப்பூரில் கல்லூரி வளாக வடிவிலான முதல் ஒருங்கிணைந்த கட்டடம் அடுத்த ஆண்டின் நான்காம் காலாண்டில் கட்டி முடிக்கப்படும் என்றும் கேப்பிட்டலேண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒன் நார்த் பகுதியில் 2.4 ஹெக்டர் பரப்பளவிலான நிலத்தில் அமையவிருக்கும் 'ரோச்செஸ்டர் காமன்ஸ்' எனும் அந்த ஒருங்கிணைந்த திட்டத்தில், 17 மாடி அலுவலக கட்டடம் அமையும்.
அதுபோக, 12 மரபுடைமை பங்களா வீடுகள் அமையவிருக்கின்றன. அவற்றில் ஏழு வீடுகள் அலுவலகங்களாகவும் எஞ்சிய ஐந்து வீடுகள் உணவு, பான அல்லது சில்லறை விற்பனைக்காக பயன்படுத்தப்படும்.
400,000 சதுர அடி பரப்பளவிலான இந்த ஒருங்கிணைந்த திட்டத்தை கேப்பிட்டலேண்ட் நிறுவனம் கட்டி நிர்வகிக்கும். அதில் ஹோட்டல் ஒன்றும் அமையவிருக்கிறது.
அந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக 'கெட்டபுல்ட்' எனப்படும் பகிர்வு நிர்வாகக் கற்றல் நிலையமும் அமையும். தென்கிழக்காசியாவின் அத்தகைய முதல் கற்றல் நிலையமாக அது அமையும்.
பயிற்சித் திட்டங்களை வழங்க மெய்நிகர் தொழில்நுட்பத்தை அது பயன்படுத்தும்.
ரோச்செஸ்டர் காமன்ஸ் கட்டடம், உலகத் தரம்வாய்ந்த கற்றல் முறையை உருவாக்க அரசாங்கம் கொண்டிருக்கும் இலக்கிற்கு ஒத்துப்போவதாக கேப்பிட்டலேண்ட் நிறுவனம் கூறியது.

