என்டியு முன்னாள் ஊழியருக்கு வெளிநாட்டு விமான நிலையத்தில் செய்த பரிசோதனையில் கொவிட்-19 உறுதி

என்டியு முன்னாள் ஊழியருக்கு வெளிநாட்டு விமான நிலையத்தில் செய்த பரிசோதனையில் கொவிட்-19 உறுதி

1 mins read
4dfd82f1-0b6b-4740-becf-47419bdcac4c
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

முன்னாள் ஊழியர் ஒருவர் கொவிட்-19 பாதிப்பு இருந்த வேளையில் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்ததை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நேற்று உறுதிப்படுத்தியது.

கிருமித்தொற்று கண்ட ஒருவர் பல்கலைக்கழகத்தின் மூன்று இடங்களுக்குச் சென்றதாக நேற்று முன்தினம் சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பள்ளியில் உள்ல குவாட் கஃபே, பல்கலைக்கழகத்தின் நார்த் ஸ்பைன் பிளாசாவில் இருக்கும் கொரிய உணவகமான பைக்ஸ் பிபிம், நார்த் ஸ்பைன் உணவகம் ஆகியவை அந்த இடங்கள்.

நேற்று மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட ஆலோசனைக் கடிதத்தில், கிருமித்தொற்றில் சம்பந்தப்பட்ட அந்த ஊழியர் ஆகஸ்ட் 28ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்ததாகவும் அதன்பின் வளாகத்துக்குள் அவர் தென்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தது.

அவர் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் பணியில் இல்லை. பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தபோதும் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவருக்கு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டுக்குச் சென்ற அவருக்கு, இம்மாதம் முதல் தேதி, விமான நிலையத்தில் கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதனையடுத்து பரிசோதனை முடிவுகளை அவர் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் அவர் சென்று வந்த இடங்கள் கிருமிநாசினியால் சுத்தப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.