சாங்கி விமான நிலையக் குழுமம், சுர்பானா ஜூரோங் ஆகியவற்றின் தலைவர் பதவியிலிருந்து விலகினார் லியூ முன் லியோங்

சாங்கி விமான நிலையக் குழுமம், சுர்பானா ஜூரோங் ஆகியவற்றின் தலைவர் பதவியிலிருந்து விலகினார் லியூ முன் லியோங்

1 mins read
5aac6cbf-ac4c-4859-93c6-e08857ec4f53
திரு லியூ முன் லியோங் (இடது) சுமத்திய திருட்டுக் குற்றச்சாட்டுகளிலிருந்து  அவரது முன்னாள் பணிப்பெண் திருவாட்டி பார்த்தி லியானியை (வலது) நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு விடுவித்ததையடுத்து, அவ்வாறு திருட்டுக் குற்றம் சாட்டியதற்கான காரணம் குறித்து கேள்விகள் எழுந்தன.  -

சாங்கி விமான நிலையக் குழுமத்தின் தலைவர் மற்றும் சர்பானா ஜூரோங்கின் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்து திரு லியூ மன் லியோங் விலகிவிட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் தெமாசெக் நிறுவனத்தின் மூத்த அனைத்துலக வர்த்தக ஆலோசகர் பதவி மற்றும் தெமாசெக் அறநிறுவனத்தின் கழக உறுப்பினர் பதவி ஆகியவற்றிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.

திரு லியூவிடம் ஒன்பது ஆண்டுகள் பணிப்பெண்ணாக வேலை பார்த்த பார்த்தி லியானி மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதை அடுத்து பணிப்பெண் மீது எதனால் திரு லியூ போலிஸ் புகார் அளித்தார் என அவர் நோக்கம் குறித்துக் கேள்விகள் எழத் தொடங்கின.

இதையடுத்து தம் பொறுப்புகளுக்கான ஓய்வுகாலத் திட்டங்களை முன்னரே கொண்டு வந்துவிட்டதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் திரு லியூ குறிப்பிட்டார்.

"இந்த நிறுவனங்களில் நான் ஆற்றிய பணிகள் தொடர்பில் எனக்கு எத்தகைய ஈடுபாடு உள்ளது என்பதை என்னைப் பற்றி அறிந்திருப்பவர்களுக்குத் தெரியும்," என்றார் அவர்.

தமது தற்போதைய சூழ்நிலையால் அதிக முக்கிய பணிகளுக்கிடையே நிறுவனங்களுக்கும் நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் எவ்வித கவனச் சிதறலும் ஏற்படக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தேவை ஏற்பட்டால் தாமும் தமது குடும்பத்தாரும் அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்திற்குத் தொடர்ந்து தங்களின் ஒத்துழைப்பை வழங்குவதுடன் போலிசாருக்கும் வழக்கு தொடர்பில் மறுஆய்வு செய்திட உதவுவார்கள் என்று திரு லியூ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்