சட்ட நடைமுறைக்கு வேண்டுமென்றே இடையூறு விளைவித்ததாக மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வீ ஹோங் ஷெர்ன், 33, ஓங் பெங் பூன், 64, ஆகிய அந்த இரண்டு வழக்கறிஞர்களும் சென்ற ஆண்டு மே 10 ஆம் தேதி அந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வழக்கறிஞர்கள் கையாளும் வழக்குகளில் தொடர்புடையவர் என்று தெரிவிக்கப்படும் செல்வக்குமார் சுப்பிரமணியம், 42, என்ற மூன்றாவது ஆடவர் ஒருவர் மீதும் இதேபோன்ற குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
வழக்கறிஞர் வீ-யிடம் சில தகவல்களைத் தெரிவித்து அதன் மூலம் சட்ட நடைமுறைக்கு செல்வக்குமார் வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்த முயன்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.
செல்வக்குமாரின் தற்காப்பு வழக்கறிஞராக வீ செயல்பட்டபோது, சென்ற ஆண்டு மே மாதம் முற்பகல் 10 மணிக்கும் முற்பகல் 11.51 மணிக்கும் இடையில் இந்தக் காரியம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது. அந்தத் தகவல், சிங்கப்பூர் சுங்கத்துறை நடத்திய புலன்விசாரணை தொடர்பானது என்று கூறப்படுவதாக நீதிமன்றப் பத்திரங்கள் தெரிவிக்கின்றன.
வீ, குறுஞ்செய்தி ஒன்றை ஓங்கிற்கு அனுப்பி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அந்த மூவரும் சிங்கப்பூரர்கள்.
அவர்களுக்கு நேற்று $10,000 பிணை அனுமதிக்கப்பட்டது. விசாரணைக்கு முந்தைய கலந்துரை யாடல் அக்டோபர் 5ஆம் தேதி நடக்கும்.

