நிதி நிறுவனங்களின் மூலாதார காரியங்களை நிர்வகிப்பதற்கும் அவற்றை நடத்துவதற்கும் மூத்த நிர்வாகிகளே பொறுப்பேற்க வேண்டும் என்ற ஏற்பாட்டை வலுப்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தப் புதிய நியதிகள், நிதி நிறுவனங்களின் நடத்தை தரத்தை மேம்படுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று அந்த நெறிமுறைகள் அடங்கிய 23 பக்க பத்திரத்தை வெளியிட்டது.
உலகளவில் 2008ல் நடந்த நிதி நெருக்கடியின் விளைவைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் அந்த நெறிமுறைகள் அத்தகைய தவறுகள் மறுபடியும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிசெய்யும்.
இதற்குத் தோதாக மூத்த நிர்வாகிகள் ஒவ்வொருவரும் பதில் சொல்ல வேண்டிய கலாசாரத்தை அவை பேணி உருவாக்கி பலப்படுத்தும்.
நிதி நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளை வகிப்போர் அதற்குப் பொருத்தமானவர்களாக, முறையானவர்களாக இருக்கவேண்டும். தங்களுடைய ஊழியர்களின் செயல்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
அவர்களது கண்காணிப்பின் கீழ் நடைபெறும் அலுவல்களுக்கும் அவர்களே பதில்சொல்லியாக வேண்டும் என்று ஆணையத்தின் நெறிமுறைகள் தெரிவிக்கின்றன.
புதிய நெறிமுறைகள், விதிவிலக்கு பெற்ற அல்லது 50 பேருக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் தவிர எல்லா நிதி நிறுவனங்களுக்கும் முற்றிலும் பொருந்தும்.
கடந்த 2008ல் நிகழ்ந்த உலக நிதி நெருக்கடியை அடுத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளின் பணிகள் கவனமாக அலசி ஆராயப்பட்டன.
அத்தகைய நெருக்கடி எப்படி நிகழ்ந்தது என்பதற்குப் பல நாடுகளும் விளக்கம் கேட்டன.
நிதி நிறுவனங்களிடையே யார் யார் எதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற ஏற்பாட்டில் குறைபாடுகள் காணப்பட்டதே நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்தது. சந்தையோ அரசாங்கமோ சரியாக்க நடவடிக்கைகளை அமல்படுத்தவில்லை. பயனுள்ள தடைகளும் விதிக்கப்படவில்லை என்று நிதி நிறுவனங்கள் அச்சம் தெரிவித்திருந்தன.
சிங்கப்பூரில் 2018 ஏப்ரல் மாதம் ஆலோசனை அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டு அதன் தொடர்பில் கருத்துகள் சேகரிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில் இப்போது இந்த ஆணையத்தின் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய நெறிமுறைகளுடன் 17 பக்க தகவல் அறிக்கை ஒன்றும் இடம்பெற்று இருக்கிறது. ஊழியர் சேர்ப்பு, தொடர்பு வழிகள், கண்காணிப்பு, மதிப்பீடு, நிர்வாகச் செயல்திறன் போன்ற துறைகளில் நடத்தை நியதிகளை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதை அந்தத் தகவல் அறிக்கை விளக்குகிறது.
குறைபாடுகள் காணப்பட்டால் வங்கிகளுக்கு, நிதி நிறுவனங்களுக்கு எதிராக இந்த ஆணையம் கண்காணிப்பு அல்லது அமலாக்க நடவடிக்கைகளை எடுக்கும் என்பதை நினைவூட்டும் தகவல்களும் அதில் இடம்பெற்று இருக்கின்றன.

