வாள் வீச்சு பயிற்றுவிப்பாளரான மாது ஒருவர் தனது கைத்தொலைபேசியை 13 வயது மாணவரை நோக்கி வீசினார்.
அது அவரின் மூக்கில் பட்டு வெட்டுக் காயத்தை ஏற்படுத்திவிட்டது. அதற்குத் தையல் போட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
சான் ஷிஹான் என்ற அந்த பயிற்றுவிப்பாளரிடம் பயிற்சி பெற்ற அந்தப் பையன், அவர் சொன்னதைச் செய்யவில்லை.
அதனால் கோபம் அடைந்த அந்த மாது, தன் கோபத்தைக் காட்டும் வகையில் அந்த மாணவர் இருந்த இடத்தில் போடப்பட்டு இருந்த ஒரு கோட்டை நோக்கி கைபேசியை எறிந்தார். ஆனால் அது தவறி மாணவரின் மூக்கில் பட்டுவிட்டது.
மாணவரின் வயது காரணமாக, அந்தப் பையனின் பெயர், படிக்கும் பள்ளிக்கூடம் போன்ற விவரங்களை வெளியிடக்கூடாது.
முன் யோசனையின்றி செயல் பட்டு காயம் ஏற்படுத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டின் பேரில் மாது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு $2,000 அபராதம் விதிக்கப்பட்டது. சிங்கப்பூரரான சான், 27, 'பிளேடு கிளப் சிங்கப்பூர்' என்ற வாட்போர் சங்கத்தைச் சேர்ந்தவர். சென்ற ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி காற்பந்து தற்காப்பு ஆட்ட உத்திகளைப் போதிக்க அவர் அந்த மாணவரின் பள்ளிக்குச் சென்றிருந்தார்.
மாலை சுமார் 5 மணிக்கு இடைவேளையாக பயிற்சி நிறுத்தப்பட்டது. 20 நிமிடம் கழித்து மறுபடியும் பயிற்சி தொடங்கும், எல்லாரும் கூடவேண்டும் என்றார் பயிற்றுவிப்பாளர்.
களைப்புடன் இருந்த அந்த 13 வயதுப் பையன், அதைக் காதில் வாங்காமல் உட்கார்ந்து இருந்ததைக் கண்ட மாது மாண வனை எழச் சொன்னார். மாணவன் அதைக் கேட்கவில்லை.
கோபம் அடைந்த மாது கைத்தொலைபேசியை வீசினார். மூக்கில் இரத்தம் வந்ததைக் கண்டும் அவர் பையனுக்கு முதலுதவி அளிக்கவில்லை. பொறுப்பில் இருந்த ஆசிரியரிடம் நடந்ததை அந்த மாது சொன்னதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

