ஓரறை வீட்டுக்குள் நிரம்பி வழிந்த குப்பை, எலிகள், கரப்பான்பூச்சிகள்; வாசலில் படுத்துறங்கிய முதியவர்

2 mins read
8b294046-bb6e-4593-a26c-98ec608a000f
வீட்டில் குவிந்து கிடந்த குப்பையை அகற்றிய தொண்டூழியர்கள். படம்: ஃபியோன் புவா -

குப்பை, கரப்பான்பூச்சிகள் நிறைந்த வீட்டில் வசித்த முதியவருக்கு கீப்பிங் ஹோப் அலைவ் அமைப்பு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

தோ பாயோ லோராங் 5 புளோக் 64ன் தரைத்தளத்தில் உள்ள அந்த ஓரறை வீட்டிற்குள் சென்றபோது அதைச் சுத்தம் செய்ய பல மணி நேரம் எடுக்கும் என்பது அமைப்பைச் சேர்ந்தோருக்குத் தெரிய வந்தது.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் வீட்டுக்குள் இருந்து பெரிய கரப்பான்பூச்சிகள் வெளியே ஓடின," என்று தி நியூ பேப்பர் நாளிதழிடம் அமைப்பின் நிறுவனரான திருவாட்டி ஃபியோன் புவா தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது வீட்டிற்குள் நிறைய எலிகள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

வீடெங்கும் தாங்க முடியா துர்நாற்றம் வீசியதாக தொண்டூழியர்கள் தெரிவித்தனர்.

முகக்கவசம், முகக்காப்பு, கையுறைகள், பாதுகாப்பு ஆடைகள் அணிந்தும் போதவில்லை. துர்நாற்றம் தெரியாமல் இருக்க தைலத்தையும் பயன்படுத்த வேண்டி இருந்தது.

பாதுகாப்பான தூர இடைவெளி விதிமுறைக்கு உட்பட்டு ஏறத்தாழ 35 தொண்டூழியர்கள் ஐவர் கொண்ட குழுக்களாக வெவ்வேறு நேரங்களில் வீட்டைச் சுத்தம் செய்தனர்.

கிட்டத்தட்ட ஏழு மணி நேரத்துக்கு வீட்டை அவர்கள் சுத்தம் செய்தனர்.

வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 30 குப்பைப் பைகளையும் உடைந்த மின்விசிறிகள், மிதிவண்டிகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றையும் அவர்கள் வீசினர்.

அந்த வீட்டில் வசித்து வரும் முதியவருக்கு காது அவ்வளவாக கேட்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அழுக்கான ஆடைகள் அணிந்திருந்த அவர் காலணிகள் அணியாமல் தமது வீட்டிற்கு வெளியே உள்ள பொதுத் தாழ்வாரத்தில் அட்டைப் பெட்டியை விரித்து தூங்குவது வழக்கம் என்று அமைப்பினர் கூறினர்.

தமது வீட்டில் குப்பையைக் குவித்து வைத்திருப்பது தமது நோக்கமல்ல என்று 81 வயது திரு சென் யொங்ஃபா என்று சீனமொழி நாளிதழான வான்பாவால் அடையாளம் காணப்பட்டுள்ள அந்த முதியவர் தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும் வயிற்றுப் பிழைப்புக்காக வீசப்பட்ட பொருட்களைச் சேகரித்து விற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் கொவிட்-19 நெருக்கடிநிலை ஏற்பட்ட பிறகு அவற்றை விற்க முடியாமல் போனதாக அவர் கூறினார். அவற்றை வீசவும் உடலில் வலிமை இல்லை என்று கூறிய அந்த முதியவர், வேறு வழியின்றி அவற்றை வீட்டிலேயே வைத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

கீப்பிங் ஹோப் அலைவ் செய்த உதவியை அடுத்து அவரது வீடு தற்போது சுத்தமாக இருக்கிறது. மேலும் அவருக்கு புதிய மெத்தை ஒன்றும் கிடைத்துள்ளது.

"எலிகள், கரப்பான்பூச்சிகளின் தொல்லை இல்லாமல் நான் இப்போது நிம்மதியாக தூங்கலாம்," என்று வான்பாவ் நாளிதழிடம் அவர் தெரிவித்தார்.

திரு சென்னின் வீட்டிற்கு இன்னொரு நாள் சென்று சாயம் பூச திருவாட்டி புவாவும் அவரது தொண்டூழியர்களும் திட்டமிட்டுள்ளனர்.