கொவிட்-19 காரணமாக பலருக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. அதேவேளையில், மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவோருக்கு நிலவரங்கள் இன்னும் சிரமமாகி இருக்கின்றன என்று அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று தெரிவித்தார்.
மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவோருக்காக செயல்படும் Psalt Care என்ற அறப்பணி அமைப்பில் ஒரு புதிய செயல் மையத்தை திறந்துவைத்து அதிபர் உரையாற்றினார்.
மனநலப் பிரச்சினையை எதிர்நோக்குவோருக்கு கூடுதல் ஆதரவும் ஊக்குவிப்புகளும் தேவை என்பதை திருவாட்டி ஹலிமா யாக்கோப் சுட்டினார். இருந்தாலும் அவர்களைப் போன்ற சகாக்கள் ஆதரவு அளிப்பது இதில் முக்கியமானது என்றார் அவர்.
மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவோருக்கு அதே அனுபவங்களைச் சந்தித்து இருப்பவர்கள் சொல்லும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் விரும்பிய பலன்களை ஏற்படுத்தும் என்றும் மனநலப் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவது இதனால் சுலபமாகும் என்றும் அதிபர் கூறினார்.
அதிபர் சவால் நிதி மூலம் ஆதரவு பெறும் அமைப்புகளில் Psalt Care அறப்பணி அமைப்பும் ஒன்று. ஒத்த அனுபவங்களைக் கொண்டவர்களின் உதவியுடன் இந்த அறப்பணி அமைப்பு தன்னை நாடி வரும் மனநல நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கிறது.
முறையாகப் பயிற்சி பெற்ற தொண்டூழியர்கள் ஆதரவாளர்களாக இருந்து உதவுகிறார்கள்.
சகாக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ளும் ஓர் இடம்தான் இந்தப் புதிய மையம் என்று Psalt Care அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜாக்கி டே கூறினார்.
இத்தகைய மேலும் பல இடங்கள் வருங்காலத்தில் சிங்கப்பூர் முழுவதும் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

