கொவிட்-19 காரணமாக மாணவர்கள் வீட்டிலேயே கணினி மூலம் கல்வி கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் வீட்டில் போதுமான அளவுக்குக் கணினி முதலான சாதனங்கள் இல்லாமல் சிரமமான நிலையை எதிர்நோக்கக்கூடிய நிலை இருக்கிறது.
அத்தகைய மாணவர்களுக்கு சிங்கப்பூர் கணினி சங்கம் உதவிக்கரம் நீட்டி உள்ளது.
'உங்களுக்கே கணினி நிதி' என்ற ஒரு சமூகத் திட்டத்தின் மூலம் அந்தச் சங்கம் $200,000 திரட்டியது. தொடர்பு தகவல் ஊடக மேம்பாட்டு ஆணையத்துடன் சேர்ந்து இந்த நிதி, உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவில் கால்வாசியை ஏற்கிறது.
இந்த நிதியைக் கொண்டு அத்தகைய மாணவர்களுக்கு நேரடியாக புத்தம் புதிய கணினியை வழங்கவும் இந்தச் சங்கம் முயற்சி எடுத்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் உதவி தேவைப்படும் 800 மாணவர்களுக்கு உதவி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கணினிகளை வழங்குவது ஒருபுறம் இருக்க, இந்தச் சங்கம், தகவல் தொழில்நுட்ப இளையர் மன்றம் என்ற தனது அமைப்பின் மூலம் தொண்டூழிய ரீதியில் தகவல் தொழில்நுட்ப ஆதரவுச் சேவைகளையும் மாணவர்களுக்கு வழங்குகிறது. மின்னிலக்கச் சாதனங்களையும் செயலிகளையும் பயன்படுத்த மாணவர்களுக்கு இதன்மூலம் உதவி கிடைக்கும்.
இந்த விவரங்களைத் தெரிவித்த இந்தச் சங்கம், நன்கொடையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

