இணைய மெய்நிகர் நாணய மோசடி வலை வீசி அதில் ஒருவரைச் சிக்கவைத்து அவரிடம் $365,000 கொள்ளை அடித்ததில் சம்பந்தப்பட்டிருந்த ஆடவர் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் நான்கு மாதச் சிறைத் தண்டனை (40 மாதம்) விதிக்கப்பட்டது. 12 பிரம்படிகள் கொடுக்கும்படியும் உத்தரவிடப்பட்டது.
சையது முக்தார் சையது யூசோப், 39, என்ற அந்த சிங்கப்பூரர், கொள்ளை அடித்ததாகக் கூறும் குற்றச்சாட்டின் பேரில் புதன்கிழமை குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்தக் கொள்ளை குற்றச்செயலில் நான்கு பேருக்குத் தொடர்பு உண்டு. அவர்களில் இந்த வாரம் சையதையும் சேர்த்து மூன்று பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜெரோமல் கீ மிங் லி, 29, என்ற சிங்கப்பூரருக்கு மூன்று ஆண்டுகள் சிறையும் 12 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன.
முகம்மது அப்துல் ரஹ்மான் முகம்மது என்பவருக்கு எதிரான வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. என்றாலும் இவருடைய முன்னாள் மனைவியான யோகேஸ்வரி ராமன், 35, என்பவருக்கு ஒன்பது வார சிறைத் தண்டனை கிடைத்தது.
திருட்டுப் பொருளை நேர்மையற்ற முறையில் பெற்றது, அரசாங்க ஊழியரிடம் பலவந்தமாக நடந்துகொண்டது ஆகிய வற்றுக்காக இந்த மாது தண்டிக்கப்பட்டார். கொள்ளைச் சம்பவம் பற்றிய விவரங் கள் விசாரணையில் தெரிவிக்கப்பட்டன.
கீயும் அப்துல் ரஹ்மானும் 2018 ஏப்ரல் மாதம் ஒரு திட்டம் போட்டார்கள். இணைய மெய்நிகர் நாணயம் வாங்க வருவோரை, அத்தகைய நாணயம் எதையும் வாங்கு வோருக்கு மாற்றிவிடாமல் அல்லது விற்காமலேயே கொள்ளை அடிப்பது அவர்களின் திட்டம். மலேசியாவைச் சேர்ந்த பாங் ஜுன் ஹாவ் என்பவர் அவர்களிடம் சிக்கினார்.
சிங்கப்பூரில் மெய்நிகர் நாணயம் வாங்க விரும்பிய பாங், $365,000 பணத்துடன் 2018 ஏப்ரல் 8 ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்து மிடில் ரோட்டில் இருக்கும் ஹோட்டல் 81-ல் தங்கினார். அவர் பணத்தை மலேசியாவில் இருந்து எடுத்து வந்தாரா என்பது தெரியவில்லை.
அப்துல் ரஹ்மான் முக்தாருடன் தொடர்பு கொண்டு கொள்ளையடிக்கும் திட்டத்தை அவரிடம் கூறினார். அப்துல் ரஹ்மானுடன் சென்று கொள்ளை அடித்துவிட்டு இருவரும் முக்தாரின் காரில் தப்பிச் சென்றுவிட வேண்டும் என்பது ஏற்பாடு.
இருவரும் மெய்நிகர் நாணய வியாபாரியான லீ சீ குவோக் என்பவருடன் திரு பாங்கின் அறைக்கு இரவு சுமார் 11 மணிக்குச் சென்றனர். பணத்தைத் திரு பாங் காட்டினார். உடனே முக்தார் திரு பாங்கை இடது கன்னத்தில் குத்தினார். திரு பாங் தடுக்க முயன்றார். முக்தார் அவரைக் குத்தினார்.
பிறகு அப்துல் ரஹ்மான் பணப்பையைப் பறித்துக்கொண்டார். இருவரும் தப்பிச் சென்றனர். முக்தாருக்கு $10,000 கிடைத்தது. அடுத்த நாள் அவர் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பிடிபட்டார்.
முக்தார் $30,000 பிணையில் வெளியே இருக்கிறார். அவர், அக்டோபர் 29ல் சரண் அடைந்து தண்டனையை அனுபவிக்கத் தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.

