உயிரை மாய்த்துக்கொண்ட 400 பேர்; மூவரில் இருவர் ஆண்கள்

கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவது அதிகரிப்பு

சென்ற ஆண்டில் உயிரை மாய்த்துக்கொண்டதாக 400 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாகவும் அப்படி உயிரை மாய்த்துக்கொண்ட மூவரில் இருவர் ஆண்கள் என்றும் சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை கவலை அளிப்பதாக உள்ளது எனக் கூறிய அபய ஆலோசனைச் சங்கம், அதற்குக் காரணமான சமூகப் பிரச்சினையையும் சுட்டியுள்ளது.

ஆடவரும் பையன்களும் தங்களது உணர்ச்சிகளையும் போராட்டங்களையும் வெளிப்படுத்தத் தயங்குவதே அந்தக் காரணம்.

“பலவீனத்திற்கான சிறிய அறிகுறி தெரியும் ஆண்கள் தங்களைப் பற்றிய மதிப்பீடுகளையும் தப்பெண்ணங்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. இது, மற்றவர்களிடம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வதைத் தடுக்கக்கூடிய ஒரு மனரீதியான தடுப்பரணை அவர்களுக்குள் ஏற்படுத்தி விடுகிறது,” என்று சங்கம் விவரித்தது.

இந்நிலையில், சங்கத்தின் இவ்வாண்டிற்கான ‘தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு வாரம்’ கடந்த ஞாயிறன்று தொடங்கியது. ‘தற்கொலை பாலினம் பார்க்காது’ எனும் அந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, ஆடவர் சிலரும் அவர்களின் துணைவியரும் தாங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் பற்றி விவரிக்கும் இரு காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

‘வா பனானா (Wah!Banana) யூடியூப் ஒளிவழியின் முன்னாள் நடிகர் திரு மேத்யூ வோங் ஸ்டூவர்ட், 26, அதில் ஒரு காணொளியில் பங்கேற்றுள்ளார்.

திரு ஸ்டூவர்ட் தனது 16 வயதில் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் அப்போது தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் தெரிவித்தார். நண்பரின் அறிவுரையால் அம்முயற்சியைக் கைவிட்டதாகவும் தான் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் பல இருக்கின்றன என உணர்ந்ததாகவும் அந்தக் காணொளியில் அவர் கூறியிருக்கிறார்.

கொவிட்-19 நெருக்கடி காரணமாக மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருவதாக அபய ஆலோசனைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

“பொருளியல் சரிவு, அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம், குறைந்து வரும் சமூகக் கலந்துறவாடல்கள், நிச்சயமில்லாததாக உணர்வது போன்றவை நமது மனப் போராட்டங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுவதை ஊக்குவிக்கும் ஓர் அவசரத் தேவையை ஏற்படுத்தி இருக்கின்றன,” என்று சங்கம் கூறியிருக்கிறது.

இதற்கிடையே, பெற்றோர்கள் வேலை அல்லது வருமானத்தை இழந்ததால் நிதிப் பிரச்சினை, பொருளியல் மந்தநிலையால் வருமானம் குறைந்துபோனது, கையறுநிலை என கொவிட்-19 நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்ட இளையர்கள் உதவி கோரி வருவது அதிகரித்து இருப்பதாக ‘கேர் கார்னர் சிங்கப்பூர்’ சமூக சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

சமூக விலகல் விதிகள் நடப்பில் இருக்கும் இந்தச் சூழலில் தொடர்ந்து இளையர்களைச் சென்றடைவதை உறுதிசெய்யும் விதமாக தமது குழுவினர் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாண்டு வருவதாக கேர் கார்னர் இளையர் சேவைகளுக்கான துணை இயக்குநர் மார்ட்டின் சோக் சொன்னார்.

வாட்ஸ்அப் வழியாக அடிக்கடி தொடர்புகொள்வது, காணொளி விளையாட்டுகளில் அல்லது ஆர்வமிக்க வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது ஆகியவையும் அவற்றில் அடங்கும்.

இளையர்களின் மனநலம் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், கேர் கார்னர் அமைப்பும் வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றமும் இணைந்து சமூகத்தைச் சென்றடைவதற்காக நேற்று முன்தினம் ‘டிஃபரன்ஸ் இன் யூத்’ எனும் மூன்று நாள் நிகழ்ச்சியைத் தொடங்கின.

“சக வயதினர் தங்களது நிலையை உணர்ந்துகொள்வர் என்றெண்ணி, துயரத்தில் இருக்கும் இளையர்கள் பலரும் தங்களது நண்பர்களை நாடுகின்றனர். ஆயினும், நண்பர்கள் கூறும் அறிவுரை எப்பொழுதும் சிறந்ததாக இருக்கும் எனக் கூறுவதற்கில்லை. முறையான உதவிகோர வெகு சிலரே ஊக்குவிக்கப்படுகின்றனர். அதனால்தான் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியின்மூலம் இளையர்களைச் சென்றடைவது முக்கியம்,” என்றார் திரு சோக்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!