வெளிநாட்டில் இருந்து வந்த 14 பேர் உட்பட மேலும் 87 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சிங்கப்பூரில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 57,316ஆக உயர்ந்தது.
சமூகத்தில் புதிதாக எவரும் பாதிக்கப்படவில்லை.
முன்னதாக, நேற்று முன்தினம் 63 பேரை கொரோனா தொற்றியது உறுதிசெய்யப்பட்டது. அத்துடன், வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் புதிதாக இரு கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த 63 பேரில் 55 பேர் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். அவர்களில் 26 பேர், ஏற்கெனவே கொரோனா பாதிப்பு கண்ட ஒன்பது பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததை அடுத்து ஜூரோங்கில் உள்ள 'ஏவரி லாட்ஜ்' விடுதியில் புதிய கிருமித்தொற்றுக் குழுமம் உருவானது.
அதேபோல, சிலேத்தார் நார்த்தில் உள்ள 'பிபிடி லாட்ஜ் 1ஏ'யில் உருவான புதிய கிருமித்தொற்றுக் குழுமத்திற்கும் முன்னர் கொரோனா பாதிப்பு கண்ட எட்டுப் பேருக்கும் தொடர்பு இருப்பதாகச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா தொற்றுச் சம்பவங்களில் இருவர் சமூகத்துடன் தொடர்புடையவர்கள். அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர்; மற்றவர் வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்.
அந்த சிங்கப்பூர் ஆடவரின் குடும்ப உறுப்பினர்கள் மூவர் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் கடந்த மாதம் 24ஆம் தேதி இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பியதை அடுத்து, வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பெற்று, பிரத்தியேக வசிப்பிடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
அந்த ஆடவர் இந்தியா செல்லவில்லை என்றபோதும் தம் துணைவியையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்வதற்காக அவரும் ஆகஸ்ட் 24ஆம் தேதியில் இருந்து அவர்களுடன் தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.
வெளிநாடுகளில் இருந்து வந்தோரில் அறுவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இருந்து திரும்பிய சிங்கப்பூரர்; நால்வர் பங்ளாதேஷ், ரஷ்யா, இந்தோனீசியா நாடுகளில் இருந்து வந்த வேலை அனுமதி அட்டை ஊழியர்கள்; எஞ்சியவர் பிலிப்பீன்சில் இருந்து வந்த மாணவர் விசா அட்டைதாரர்.
இதுவரை 56,543 பேர் கொரோனா தொற்றிலிருந்து தேறிவிட்டனர். இன்னும் 47 பேர் மருத்துவமனையிலும் 597 பேர் சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களிலும் இருக்கின்றனர்.
சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் இதுவரை 27 பேரும் தொற்று கண்டிருந்தபோது வேறு காரணங்களால் 15 பேரும் மாண்டுவிட்டனர்.

