நாடளவில் விநியோகிக்கப்படும் 'டிரேஸ்டுகெதர்' கருவிகள் குறித்து நிபுணர்கள் தொடர்புகளின் தடமறியும் பணியில் வேகம், விவேகம்

நாடளவில் விநியோகிக்கப்படும் 'டிரேஸ்டுகெதர்' கருவிகள் குறித்து நிபுணர்கள் தொடர்புகளின் தடமறியும் பணியில் வேகம், விவேகம்

2 mins read
ac830f78-81b1-4cb8-9f58-6fac6cf691e3
'டிரேஸ்டுகெதர்'செயலியை விடகருவிக்கு ஆற்றல் அதிகம் என்று கூறப்படுகிறது. படங்கள்: அறிவார்ந்ததேச, மின்னிலக்கஅரசாங்கக் குழுமம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

நாடு முழுவதும் திங்கட்கிழமையிலிருந்து 'டிரேஸ்டுகெதர்' கருவிகள் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளன. இதன் வழி தொடர்புகளின் தடங்களைத் துரிதமாக அறிந்துகொள்ள முடியும். மேலும், 'டிரேஸ்டுகெதர்' கைபேசிச் செயலியில் தென்படும் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கடந்து வர இது உதவும் என்று தொழில்நுட்ப, பொதுச் சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 'டிரேஸ்டுகெதர்' கருவியைச் செயல்படுத்த எவ்வித கைபேசித் தளமும் தேவையில்லை என்று சுட்டினார் இணையப் பாதுகாப்பு நிபுணர் திரு கே.கே.லிம்.

குறிப்பிட்ட சில கைபேசிகளைப் பயன்படுத்துவோரால் 'டிரேஸ்டுகெதர்' செயலியை இயக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பழைய 'ஆப்பிள்' இயக்க முறையைக் கொண்டுள்ள கைபேசிகளும் 'கூகல் பிளே ஸ்டோர்' வசதியில்லாத 'ஹுவாவெய்' கைபேசிகளும் இதில் அடங்கும்.

மேலும், கைபேசியை வாங்கும் வசதி அல்லது அதைப் பயன்படுத்தும் ஆற்றல் மூத்த குடிமக்கள் சிலருக்கு இருக்காது என்றும் திரு லிம் குறிப்பிட்டார். சிறுவர்கள் கைபேசி வைத்திருக்கும் வாய்ப்பும் சில சமயம் இருக்காது என்றார்.

எனவே, இத்தகைய கருவிகளைத் தருவதன் மூலம் மூத் தோரும் சிறார்களும் திட்டத்தில் இணைய முடிகிறது என்றார் அவர்.

எந்த அளவுக்கு விரிவாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து 'டிரேஸ்டுகெதர்' திட்டத்தின் வெற்றி உள்ளது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டியோ யிக் யிங் கூறியுள்ளார்.

மக்கள்தொகையின் 20 விழுக்காட்டினர் மட்டுமே இத்திட்டத்தில் இணைந்தால், அது 4% வெற்றியே அடைந்ததாகக் கொள்ளப்படும் என்று அவர் பகிர்ந்துகொண்டார்.

அதன்படி, திட்டத்தைப் பயன்படுத்தித் தொடர்புகளின் தடங்களை அறியும் அதிகாரிகளால் ஒரு கொவிட்-19 நோயாளியின் 100 தொடர்புகளில் நான்கு பேரை மட்டுமே அடையாளம் காண முடியும் என்று உதாரணம் காட்டினார் பேராசிரியர் டியோ.

தற்போதைய நிலவரப்படி, 'டிரேஸ்டுகெதர்' செயலி 2.4 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது இங்குள்ள மக்கள்தொகையின் 40%. இருப்பினும் இது போதாது என்றும் மேலும் அதிகமானோர் பயன்படுத்துவதில் செயலியின் திறன் அடங்கிஉள்ளது என்றும் அறிவார்ந்த தேசத் திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருந்தார்.

குடியிருக்கும் வட்டாரத்தைப் பொறுத்து வரும் திங்கட்கிழமை முதல் 'டிரேஸ்டுகெதர்' கருவிகள் வழங்கப்படவுள்ளன. காத்திருக்க விரும்பாமல் முன்கூட்டியே பெற விரும்புவோர் ஒரு சில விநியோகத் தளங்களுக்குச் செல்லலாம்.

ஒவ்வொரு சாதனமும் அந்தந்தப் பயனாளரின் பெயரில் பதிவாகி இருக்கும். இதனால் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைத் தொடர்புகளின் தடமறியும் அதிகாரிகள் எளிதில் அடையாளம் காண முடியும்.

இருப்பினும் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் 'டிரேஸ்டுகெதர்' கருவியின் வெற்றி உள்ளது என்று இரு நிபுணர்களும் குறிப்பிட்டனர்.

"முகக்கவசத்தை அணிவது போன்று, கருவியை வைத்துக்கொள்ளும் பழக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்," என்றார் திரு லிம்.